காத்தான்குடி கொலை தொடர்பில் மர்மம் என்ன??

காத்தான்குடியில் ஓரு வயோதிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.


இந்தப் படுகொலை பற்றி ஊர் பெருமை கொள்பவர்கள் அதன் களங்கம் கருதி அடக்கி வாசிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் கஞ்சா கோப்பி விற்பனை செய்பவர் என்றும் அதனால்தான் இந்தக் கொலை இடம் பெற்றிருக்கிறது என்றும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது உண்மையாயின் கொலையாளிகளுக்கு இதற்கான உரிமையை யார் கொடுத்தார்கள்? அல்லது எந்த தத்துவார்த்தத்தின் அடிப்படையில் இந்த அநியாயத்தினை புரிந்தனர்?

கஞ்சா கோப்பிதான் காரணம் என்றால் அதை விடவும் மோசமான சமூக விரோத செயல்களைக் கண்டு கொள்ளாது விளிம்பு நிலையில் வாழ்ந்த ஓரு பலவீனமான மனிதரை கொலையாளிகள் இலக்கு வைத்துள்ளனர்.

மருந்து வகைகளில் கலப்படம், உணவு வகைகளில் கலப்படம், அளவை நிறுவைகளில் மோசடி என பல்வேறுபட்ட சமூக விரோத செயல்கள் மலிந்து காணப்படுகின்ற ஓரு சமூகக் கட்டமைப்பில் இந்த ஓரு சாதாரண விளிம்பு நிலை மனிதன் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றான்.

மேற்சொன்ன கலப்படங்களையும்,மோசடிகளையும் புரிகின்ற சமூக விரோதிகளை இவர்களால் நெருங்க முடியாது . ஏனெனில் அவர்கள் மேல்தட்டு வர்க்க நிலையில் இருந்து கொண்டே அதனை செய்கின்றனர்.

தவிரவும் அவர்கள் பல்வேறு சமய சமூக நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்பவர்களாக அல்லது அவற்றின் நிர்வாகிகளாக வலம் வந்து கொண்டு தமது கரங்களுக்கு வெள்ளைச் சாயம் அடித்துக் கொள்கின்றனர் .

அரசியல்வாதிகளின் தேர்தல் செலவுகளுக்கு கொடையளித்து தமக்கான பாதுகாப்பு வேலிகளையும் அமைத்துக் கொண்டுள்ளனர்.

இந்தக் கொலையாளிகள் யாராக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும். இத்தகைய வன்முறைக் கும்பல்கள் மக்களால் எதுவித நிபந்தனைகளுமின்றி நிராகரிக்கப்படல் வேண்டும் . அவர்கள் முளையிலேயே கிள்ளியெறியப்படல் வேண்டும் .

காத்தான்குடி மக்கள் இன்று இதனை மெளனமாக அங்கீகரிப்பதானது, நாளை இதே துப்பாக்கிகள் தத்தமது வீட்டுக் கதவுகளை தட்டுவதற்கு வழங்கப்படுகின்ற அங்கீகாரமாகும்.

இதற்கு கடந்த கால வரலாற்றிலிருந்து நல்லதொரு படிப்பினை இருக்கிறது .

80 களின் பிற்பகுதியில் இத்தகையதொரு வன்முறைப் பிரிவினரை மெளனமாக அங்கீகரித்ததன் விளைவினை காத்தான்குடி வர்த்தக சமூகம் பின்நாட்களில் அனுபவித்து இறுதியில் விடுதலைப் புலிகளின் உதவியை நாடி அவர்கள் அழிக்கப்பட்டதான ஓர் கசப்பான வரலாறு இருக்கிறது .

வன்முறைக் கும்பல்கள் / அடிப்படைவாதக் கும்பல்கள் எந்த வடிவில் வந்தாலும் அதனை நிராகரிப்போம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.