கோஹ்லி மற்றும் டோனியை ஒப்பிடுகையில் அம்பத்தி ராயுடு மதிப்பு மிக்க வீரர்!

ஐ.பி.எல் 2018 சீசனில் ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட செயல்பாடு மற்றும்
அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையை வைத்து, மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.
ஐ.பி.எல் டி20 தொடரின் 11வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஐ.பி.எல் ஏலத்தின் போது, வயது அதிகமான வீரர்களை ஏலத்தில் எடுத்ததாக சென்னை அணி கிண்டலுக்கு ஆளானது. ஆனால், டோனி தலைமையிலான சென்னை அணி விமர்சனங்களை உடைத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், ஹன்சா ரிசர்ச் எனும் தனியார் நிறுவனம், வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடு மற்றும் அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையை கொண்டு மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை தயாரித்துள்ளது.

இந்தப் பட்டியலில் குறைந்தபட்சம் ஒரு போட்டியில் விளையாடிய வீரர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ஒரு வீரர் எடுத்த ஓட்டங்கள், அரைசதம், சதம், விக்கெட், கேட்ச் ஆகியவற்றைக் கொண்டு அவருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், நட்சத்திர வீரர்கள் அதிக புள்ளிகளை பெற்றிருந்தாலும், அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகை அதிகமாக இருப்பதால் பட்டியலில் அவர்கள் பின் தங்கியுள்ளனர்.

ஒரு வீரர் பெறும் ஒரு புள்ளிக்கு, அணி எவ்வளவு செலவு செய்கிறது என்பதே இந்த கணக்கீடு. அதன்படி, ஐ.பி.எல் 2018-யில் மிகவும் மதிப்பு மிக்க வீரராக அம்பத்தி ராயுடு இந்தப் பட்டியலில் உள்ளார்.

சென்னை அணி வீரரான அம்பத்தி ராயுடு 2734 புள்ளிகள் எடுத்துள்ளார். ஆனால், அவர் பெற்ற சம்பளம் ரூ.2.2 கோடி தான். அவரின் ஒரு புள்ளிக்கு அணி செலவளித்த தொகை 8 ஆயிரம் மட்டுமே.

பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி 2225 புள்ளிகளை எடுத்துள்ளார். அவர் நேரடியாக ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்றாலும், அவரது சம்பளம் ரூ.17 கோடி. இதன்மூலம், அவரின் ஒரு புள்ளிக்கு ரூ.76,404-ஐ அணி செலவளித்துள்ளது.

இதேபோல், சென்னை அணித்தலைவர் டோனி பெற்ற புள்ளிகள் 2450 ஆகும். அவர் இந்த சீசனில் ரூ.15 கோடியை சம்பளமாக பெற்றார். எனவே, அவரின் ஒரு புள்ளிக்கு ரூ.61,224-ஐ அணி அவருக்காக செலவளித்துள்ளது.

கோஹ்லி மற்றும் டோனியை ஒப்பிடுகையில் இந்த சீசனில் அம்பத்தி ராயுடு மதிப்பு மிக்க வீரராக உள்ளார். இறுதிப்போட்டியில் சதம் விளாசிய அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 3330 புள்ளிகளை பெற்றுள்ளார்.



அவர் பெற்ற ஊதியம் 4 கோடி என்பதால், அவரது ஒரு புள்ளிக்கு அணி ரூ.12 ஆயிரத்தை செலவழித்துள்ளது. பஞ்சாப் அணியில் விளையாடிய கிறிஸ் கெயில் 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 1706 புள்ளிகளை பெற்றுள்ளார். அவரது ஒரு புள்ளிக்கு அவருக்கு 9 ஆயிரம் ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது.

மும்பை அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 15 கோடி ஊதியம் பெற்ற நிலையில், அவர் எடுத்த புள்ளிகள் 1252 ஆகும். அவரின் ஒரு புள்ளிக்கு ரூ.1,19,808 ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

2018 ஐ.பி.எல்-லில் விளையாடிய அனைத்து வீரர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.