அரசுக்கு விஷால் சொன்னது என்ன?

குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கும் வகையில் 10

தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூன் 20) வழங்கினார். இதற்கு நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் நன்றி கூறியுள்ளார்.
குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 2007 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களில் மானியம் பெறுவதற்கு தகுதியான தமிழ்த் திரைப்படங்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆர்.ரகுபதி, டி.வி. மாசிலாமணி தலைமையிலான தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.
இத்தேர்வுக் குழுவினர், 2007ஆம் ஆண்டுக்கு 14 திரைப்படங்களுக்கும், 2008ஆம் ஆண்டுக்கு 18 திரைப்படங்களுக்கும், 2009ஆம் ஆண்டுக்கு 22 திரைப்படங்களுக்கும், 2010ஆம் ஆண்டுக்கு 21 திரைப்படங்களுக்கும், 2011ஆம் ஆண்டுக்கு 17 திரைப்படங்களுக்கும், 2012ஆம் ஆண்டுக்கு 22 திரைப்படங்களுக்கும், 2013ஆம் ஆண்டுக்கு 12 திரைப்படங்களுக்கும் மற்றும் 2014ஆம் ஆண்டுக்கு 23 திரைப்படங்களுக்கும் என மொத்தம் 8 ஆண்டுகளுக்கு 149 திரைப்படங்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார்கள்.
தேர்வு செய்யப்பட்ட 149 திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தலா 7 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 10 கோடியே 43 லட்சம் ரூபாய் மானியத்தொகைக்கான காசோலைகளை திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், 10 தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியமாக தலா 7 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கித் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து விஷால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிறுபட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு 2007 முதல் 2014 வரை வெளியான குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட சமூக கருத்துள்ள திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு 20.06.2018 சென்னை தலைமை செயலகத்தில் ரூ.7 - லட்சம் மானியம் வழங்கி அவர்களைக் கௌரவித்த மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், துணை முதல் அமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும் செய்தித்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்களுக்கும் & அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.