பாவப்பட்ட(தவராஜா) பணத்தை வட மாகாண சபை ஏற்க மறுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை திருப்பித் தரும்படி வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கேட்டுக் கொண்டிருந்த நிலையில், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்படி பணத்தை மக்களிடம் இருந்து சேகரித்து இன்று காலை (12) வடமாகாண சபைக்குக் கொண்டு சென்றனர்.


மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாண சபையினால் நினைவுகூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உ றுப்பினர்களிடம் 7 ஆயிரத்து 500ரூபா அறவீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடையணிந்த சிலரே நடத்தினார்கள் என கூறிய எதிர்க்கட்சி தலைவர், தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார்.

ஆனாலும் அந்த பணத்தினையும் சேர்த்தே நினைவேந்தல் செய்யப்பட்டது என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார். மேலும் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் அதனையே கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஒரு ரூபா வீதம் 7 ஆயிரம் பேரிடம் சேர்க்கப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு இன்று காலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வடமாகாண சபைக்கு வந்திருந்தனர். எனினும் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறித்த பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.

இதன் பின்னர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் அந்த பணத்தை வழங்க மாணவர்கள் முயன்றபோது அவைத் தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர், “மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம். ஆகவே இந்த பணத்தை வாங்கி கொள்ளமாட்டோம். ஆகவே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் பேசுங்கள்” என முதலமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் மாணவர்களால் கொண்டுவரப்பட்ட பணப்பொதியில் “பாவப்பட்ட பணம்” என எழுதப்பட்டிருந்தது. மேலும் இன்றைய அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.