கட்டாக்காலிகளால் கருக்கப்பட்ட தளிர்.....!

என்ற சாமி..... என்ர சாமி...
ஓயாமல் கதைப்பாள். கொஞ்ச நேரமும் கதைக்காமல் இருக்க மாட்டாள். துருவிப் பிழிந்த தேங்காய்ப் பூவைக் கொடுத்து நல்லா பிசைய சொல்லுவன். பள்ளிக் கூடத்தில போய் "அம்மா தேங்காய்ப் பூ பிசையத் தந்தவா ரீச்சர் " என்பாள்.
ஏன் ரெஜினா அம்மா தேங்காய்ப்பூ பிசையத் தந்தவா... ? என ரீச்சர் கேட்டதற்கு " அப்ப தானாம் எழுத்து வடிவா வருமாம் ரீச்சர்"
என்ன பள்ளிக் கூடத்தில நடந்தாலும் வந்து வாய் ஓயாமல் சொல்லுவாள்.
போட்டி வருகுதம்மா பாடமாக்க வேணும். சமைத்துக் கொண்டிருக்கும் என்னிடம் "அம்மா நான் பிலத்தா(பெரிதாக) சொல்றன் பிழை வந்தால் திருத்துங்கோ...
இப்படி எல்லாம் சொல்லும் என்ற சாமி(குழந்தையை சாமி என்கிறார்)
அந்தத் தாய் வியர்வையாலும் கண்ணீராலும் நனைந்து உடற்பலத்தை இழந்து கொண்டிருக்கிறாள். அவளது தாயார்( ரெஜினாவின் அம்மம்மா)
தன் மகளின் முகத்தையும் கழுத்துப் பகுதியையும் துடைத்து "அழத பிள்ளை "என கண்ணீரை கஸ்ரப்பட்டு அடக்கி பிள்ளையின் கண்ணீரைத் துடைக்கிறார்.
                வழமையா பிள்ளையை நான் தான் பாடசாலையால கூட்டி வாரனான். அன்றைக்கென்று சமுர்த்திச் சங்கத்துக்கு போட்டு வர நேரமாயிற்று. பிள்ளைகளோடு பிள்ளைகளாக (பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு) பிள்ளை வீட்ட வந்திருக்கிறா. எனக்கு நான்கு பிள்ளைகள் மூத்த இரண்டும் ஆண் பிள்ளைகள்.  மூத்தவர் பத்தாமாண்டு படிக்கிறார். இரு மகன்மாரும் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியிலும் மகள்மார் இருவரும் காட்டுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையிலும் கல்வி கற்கிறார்கள். ரெஜினா தரம் ஒன்றில் கல்வி கற்பதால் அவருக்கு 12 மணிக்கு பாடசாலை முடிகிறது. அவளது அக்காவிற்கு 1.30 மணிக்குப் பாடசாலை முடிவடைகிறது.
          ரெஜினா தனது பக்கத்து வீட்டுப் பிள்ளையுடன்(உறவுமுறைப் பிள்ளை தான்) பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வருகிறாள். தன்னோடு வந்த பிள்ளைக்கு கைகாட்டி விடை பெறுகிறாள். வீட்டில் அம்மா இல்லை. தனது புத்தகப் பையைக் கழற்றி வாசலில் வைத்து விட்டு தனது சப்பாத்துக்களைக் கழற்றி வைத்துள்ளார்.
       அந்த வேளை தான் அப்பாவின் தம்பி வருகிறார். பிள்ளைக்கு கைநிறைய தின் பண்டங்களை வாங்கிக் கொடுத்து அழைத்துச் சென்றுள்ளார். சித்தப்பாவோடு செல்கிறேன் என்ற மகிழ்வைத் தவிர ரெஜினாவுக்கு வேறு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அண்ணன் தம்பிக்கிடையிலான முன் விரோதம் ஒரு பச்சைப் பாலனின் உயிர்ப் பறிப்பில் முடிந்திருக்கிறது. சித்தப்பாவும் அவரது சகாக்களும் பாடசாலையிலிருந்து இடை விலகியவர்கள். ஏற்கனவே குற்றவாளிகளா கைது செய்யப் பட்டு சீர் திருத்தப் பள்ளியில் இருந்தவர்கள். சீர் திருத்தப் பள்ளியால் வந்த பின்னரும் அவர்கள் திருந்தவில்லை. கோவில் உண்டியலை உடைத்துத் திருடுவது. இவர்களிடம் புத்தபகாவானும் தப்பவில்லை. அவருடைய உண்டியலையும் திருடியதால் பிடிபட்டுத் தண்டிக்கப் பட்டார்கள்.
      வீதியால் போகும் பெண்களோடு தகாத வார்த்தைகள் கதைப்பதும் சேட்டை விடுவதனாலும் நல்லொழுக்கமுள்ளோரால் தட்டிக் கேட்கப்பட்ட போது அவர்களின்(குற்றவாளிகளின்) பெற்றோர்களும் பிள்ளைகளுக்காகப் பரிந்து பேசி தகாத வார்த்தைகளால் வாதம் செய்வதாகவும் கிராமத்து மக்கள் கூறுகிறார்கள்.
       1.30 மணிக்கு பாடசாலையால் இரண்டாவது மகளும் வந்துவிட்டார். தாய் வருகிறார். அவர் எந்த வேலைக்கும் போவதில்லையாம். பிள்ளையின் புத்தகப்பையும் சப்பாத்துமிருக்கிறது. பக்கத்து வீடுகளுக்கும் தேவையற்றுப் போக மாட்டாளாம்.  இருந்தும் அம்மாவைக் காணாததால் பக்கத்தில் தங்கையின் வீட்டில்( ரெஜினாவின் சித்தி வீடு) நிற்கிறாள் என நினைத்து வேலியால் (ஓலைகளால் அடைக்கப் பட்டது. ) எட்டி அம்மா  கூப்பிடுறார். பிள்ளை வரவில்லை என்ற பதில் மனதில் பயத்தை ஏற்படுத்த எல்லோரும் பாடசாலை பாடசாலைத் தோழியர் வீடுகள் தேடி எங்குமில்லை என்றதால் சந்தேகம் வலுக்க பற்றைகள் கிணறுகள் எனத் தேடுகிறார்கள். வீட்டுத் திட்டம் பெறுவதற்காக வந்து வீட்டைக் கட்டி விட்டு வேறிடத்தில் வாழும் ஒரு குடும்பத்தின் வீட்டுக்கு அருகில் ஒரு கிணறுள்ளது. அதை Usaid நிறுவனம் பயிர்ச்செய்கைக்காக கட்டிக் கொடுத்துள்ளது. அந்தக் கிணற்றில் அவ்விடத்து மக்களில் சிலர் குளிப்பது வழமை. அந்தக் கிணற்றடியால் ஒரு வயோதிபப் பெண் தனது துணிகளைத் துவைத்து குளித்து வருகிறார். அந்தக் கிணற்றுக்கை பிள்ளை விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரிடம் விசாரித்துள்ளனர். அவர் இல்லை என நகர்ந்திருக்கிறார். தேடுபவர்கள் வேறுபக்கமாக தேடச் சென்ற வேளை வீட்டுத்திட்டத்தில் பெற்ற வீட்டுக்குள் சாகடித்த பிள்ளையின் உடலைப் போட்டு விட்டு தேடுபவர்களோடு குற்றவாளிகளும் இணைந்திருக்கிறார்கள். ஏற்கனவே குற்றவாளிகளாக இருக்கும் அவர்களை ஊர் மக்கள் அனைவரும் இணைந்து  சுற்றிப் பிடித்து பொலிஸ் வரும்வரை காத்திருக்கிறார்கள். மேப்ப நாய்களோடு பொலிஸ் வருகிறது. அந்தக் கிணற்றை மட்டும் இன்னும் பார்க்கவில்லை என எண்ணி அங்கு போய்ப் பார்க்கிறார்கள். ஒரு அடித் தண்ணீர் மட்டமே கொண்ட அந்தப் பாசி பிடித்த கிணற்றில் பிள்ளையின் உயிரற்ற உடல்......
         பிள்ளையின் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கிறார்கள்.
           காட்டுப்புலவு கிராமம் யாராலும் கவனிக்கப் படாத குன்றும் குழியும் நிறைந்த பாதையைக் கொண்டது. பற்றைக்காடுகளும் புதர்களும் நிறைந்துள்ளது. தனித்துப் பயணிக்க முடியாத அளவு பயம் நிறைந்த பாதையாக உள்ளது. அங்கு வாழும் பெருமளவு இளைஞர் உலகம் மதுபானம் அருந்துவதை தண்ணீர் அருந்தல் போல் நினைக்கிறார்களாம். இளவயதில் திருமணம் செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் நாகரிகம் இல்லாத பேச்சுக்களைப் பேசுகிறார்கள். இதனாலேயே அயல் கிராமத்து மக்களோ பாடசாலைச் சமூகமோ அஞ்சலி செலுத்த செல்லக் கூடப் பயப்படுவதாக கிராமத்து நலன் விரும்பி ஒருவர் தெரிவித்தார். தங்களுடைய கிராமத்தில் போதைப் பொருட்கள் மதுபானம் சமூகச் சீரழிவைச் செய்வோருக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்.கிராமத்திலிருந்து வேறிடத்துக்கு பொலிஸ் கொண்டு போக வேணும் என அவர் ஆதங்கப் பட்டார்.

ரெஜினா திரும்பி வரப் போவதில்லை. ரெஜினாவின் நினைவுகள் மறைந்து விடப் போவதுமில்லை. பாதகர்களுக்கு பாடம் புகட்டும் சட்டங்கள் உருவாகும் வரை காயங்கள் ஆறப்போவதில்லை. இந்தக் குற்றச் செயல்களை செய்யும் பிள்ளைகள் 14 தொடக்கம் 22 வயதுக்கு உட்பட்ட பிஞ்சில் பழுத்த நஞ்சுகள் என்பதும் குறிப்பிடத் தக்கது.  இவர்களின் பெற்றோர் கணவன் இருக்கத் தக்கதாக இன்னொருவருடன்  திருமணம் செய்த தாய் அல்லது தாயை கைவிட்டு இன்னொரு திருமணம் செய்த தந்தையை உடைய பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள். பெற்றோர்களின் அரவணைப்பு இல்லாத பிள்ளைகளாதலால் தட்டிக் கேட்டு வழிப்படுத்தி வளர்க்கும் பெற்றோரின்மையால் வழிதவறி சமூகத்தை சீரழிக்கிறார்கள்.
                         என்ர சாமி..... அந்தத் தாய் மீண்டும் மீண்டும் அழுகிறாள். புலம்புகிறாள்.
என்ர பிள்ளை முற்றத்தில் நின்று விளையாடினாலே ரெஜி.....ரெஜி...
என்று கூப்பிடுவேன். ஓய்....(ஓம்) என்றாமல் பேசாமல் இருப்பாள். பிள்ளைட சத்தத்தைக் காணல என்று ஓடி வந்து வெளில பார்த்திட்டுப் திட்டினால்...
" என்னம்மா ...உங்களுக்கு மூளையில்லையோ ஆ?
குசினி யன்னலுக்கால எட்டிப் பார்த்தால் நானிருந்து விளையாடுறது தெரியும் தானே.. என்று சொல்லிச் சிரிப்பாள்....
என்ர ரெஜிக்குட்டி படிப்பில கெட்டிக்காரி. முத்து முத்தான எழுத்துக்கள்.....
அம்மா ... வகுப்பில நான் தான் எல்லாற்ற கொப்பியையும் கூப்பிட்டுக் குடுக்கிறனான். அடுத்த முறை நான் தானாம் வகுப்பு மொனிட்டர். ரீச்சர் சொன்னவாம்மா.....
என்ர ரீச்சருக்கு என்னை நிறையப் பிடிக்குமம்மா....
நெடுகலும் ரீச்சர் என்னைத் தான் கூப்பிடுவா. பிழை விட்டாக்களுக்கு வாசிக்க சொல்லிக் குடுக்க சொல்லுவா...
என்ர ரீச்சர் என்னில நல்ல பாசம்....

அந்தத் தாய் அவளது பிள்ளையின் நினைவுகளைக் கிளறுகிறாள். இழந்து போன வலிகளோடு.... இருந்த போது பிள்ளை செய்த குறும்புகளைக் கோர்த்து மாலை மாலையாகப் போடுகிறாள்.... அழுகிறாள்.
அவளுடைய உதடுகள் பிள்ளையைத் தவிர வேறெதுவும் பேசவில்லை.......
           நானும் அழுகிறேன். நானும் ஒரு தாய் தானே......
   
         வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.