நெல்லையப்பர் கோயில் தேர்த் திருவிழா ஏற்பாடுகள் !

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலின் தேர்த் திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலின் ஆனித் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் காலையிலும் மாலையிலும் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று காலை 7 மணிக்கு சுவாமி நடராஜர் வெள்ளை சாத்தி எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வந்தார். மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்கச் சப்பரத்தில் வீதியுலாவாக வரவுள்ளார். 
ஆனித் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நாளை (27-ம் தேதி) தேர்த் திருவிழா நடைபெற இருக்கிறது. காலை 9.30 மணி முதல் 10.20 மணிக்குள் தேரின் வடம் பிடிக்கப்பட்டு பக்தர்களால் இழுக்கப்படுகிறது. நான்கு ரத வீதிகளில் வலம் வரும் தேரானது மாலையில் நிலைக்கு கொண்டுவரப்படும். இதற்காக தேருக்கு அலங்காரம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. தேர்த் திருவிழாவுக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தேரோட்டம் காரணமாக நாளை நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை நகரின் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் வகையில் போக்குவரத்து மாற்றங்களை போலீஸார் செய்திருக்கிறார்கள். வாகன நிறுத்தங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட இடங்களைத் தவிர வேறு எங்கும் வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தக் கூடாது எனப் போலீஸார் அறிவுறுத்தி இருக்கிறார்கள். 
இது தவிர, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஜெயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட இருக்கிறார்கள். அத்துடன், சிசிடிவி கேமராக்கள் ரதவீதிகளில் அமைக்கப்பட்டிருப்பதால் அதன் வாயிலாகவும் போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். மேலும், நெல்லையப்பர் கோயில் தேர்திருவிழாவையொட்டி நெல்லை நகரில் உள்ள 8 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. இலவச கழிப்பறைகள், நடமாடும் கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வர வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.