பாலத்தீன பெண் தன்னார்வலர் இஸ்ரேல் சுட்டதில் பலி!

இஸ்ரேல் – பாலத்தீன எல்லையில் நடந்துவரும் சண்டையில் இஸ்ரேல் படைகள் சுட்டதில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவ

உதவி வழங்கச் சென்றபோது, கடந்த வெள்ளிக்கிழமை, இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 21 வயதாகும் பெண் தன்னார்வலர் ரஸன் அல்-நஜாரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கலந்துகொண்டனர்.
சண்டை நடக்கும் பகுதியில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் பைகளால் உயிரிழந்த திமிங்கலம்
தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள கடற்கரையில் கரை ஒதுங்கியபின் உயிரிழந்த திமிங்கலம் 80 பிளாஸ்டிக் பைகளை விழுங்கி இருந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பைகளின் மொத்த எடை 8 கிலோ. உயிர் பிழைக்க வைக்கும் முயற்சியின்போது அந்தத் திமிங்கலம் ஐந்து பைகளை மட்டுமே கக்கியது.
ஜி7 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு
அமெரிக்கா விதித்துள்ள எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான இறக்குமதி வரிக்கு ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அமெரிக்கக் கருவூலச் செயலர் ஸ்டீவ் மனுஷின் பிற நாடுகளின் கடுமையான உணர்வுகள் குறித்து அதிபர் டிரம்பிடம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
‘செயற்கை நுண்ணறிவு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது’
அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனுடன் தாங்கள் செய்துகொண்டுள்ள, காணொளிகளில் மனிதர்கள் மற்றும் பொருட்களை வேறுபடுத்திக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்போவதில்லை என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடையவுள்ள அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து சுமார் 4,000 கூகுள் ஊழியர்கள் தங்கள் நிறுவனதுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியிருந்தனர். செயற்கை நுண்ணறிவு அழிவுக்கு பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.