வாகரையில் அதிகரிக்கும் சிறார் துஷ்பிரயோகம்!

மட்டக்களப்பின் கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு தொழில் முயற்சிகள் நிமித்தம் தென்னிலங்கையில் இருந்து வருகை தரும் தொழில் நிறுவனங்கள்

வறுமைக்குட்பட்டுள்ள ஈழத் தமிழ்க் கிராமங்களில் தமிழ்ச் சிறார்களைத் தொழிலுக்கு அமர்த்துகின்றன. ஒரு சில இடங்களில் பாலியல் துஷ்பிரயோகமும் இடம்பெறுவதாக சமூக அக்கறை கொண்ட கிராமத்தவர்கள் கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவிக்கின்றனர்.
ஈழத் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் சீரழிக்கப்படுவதை, அதிலும் குறிப்பாக வறுமையைப் பயன்படுத்தி சிறுவர் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதை, ஏன் ஒரு நிறுவனங்களும் கண்டுகொள்வதில்லை என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைக்கின்றனர். ஊடகங்களாவது சமூகத்தின் கண்களைத் திறக்கவேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
சிறுவயதில் திருமணங்களும் அதிகரிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இது நல்லதா இல்லையா என்பதும் புரியவில்லை என்றார்கள் அவர்கள்.
குறித்த சிக்கல் தொடர்பாக விழிப்புணர்வு பெற்ற கதிரவெளி பொது நூலக வாசகர் வட்டம் புதன்கிழமையன்று சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்திருப்பதை வரவேற்ற அவர்கள், அந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வாகரை பிரதேச சபை தவிசாளர் சிவஞானம் கோணலிங்கம் பகிரங்கமாகவே இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியதாகவும் கூறினர்.
கல்வியில் முன்னேற்றம் இல்லை, சிறுவயதில் திருமணம், சிறார்களை வேலைக்கு அமர்த்தல், சில இடங்களில் பாலியல் துஸ்பிரயோகம் போன்ற செயற்பாடுகளிலிருந்து சிறார்களை விடுவித்து சிறார்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமாயின் இவ்வாறு பின்தங்கிய கிராமங்களில் பல செயற்த்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அந்த நிகழ்வில் கலந்து கொண்ட கோணலிங்கம் கூறியிருந்தார்.
 இந்நிகழ்வின் போது சிறார்களுக்கான புதிய பொதுநூலகம் ஒன்றும் தவிசாளரினால் திறந்து வைக்கப்பட்டது.
இன அழிப்புப் போர் என்று ஈழத்தமிழர்கள் வர்ணிக்கும் போரின் நேரடிப் பாதிப்புகளால் மட்டுமல்ல, போருக்குப் பின்னான காலத்தில் நடைபெறும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையாலும் நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களாக கதிரவெளி, வாகரை வாழ் ஈழத்தமிழர்கள் காணப்படுகிறார்கள்.
வாகரையில் போர் முடிவடைந்து பத்தாண்டு கடந்த போதிலும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையவில்லை.
பல உதவி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தினாலும் மக்கள் தொடர்ந்து வறுமைக்கோட்டின் கீழ் தான் இங்கு வசிக்கின்றார்கள்.
இக்கிராமங்களில் வசிக்கும் மக்களின் வறுமை இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்கள் நடைபெறுவதற்கான காரணங்களில் ஒன்று.
இது குறித்த சமூக ஆர்வம் கொண்ட கிழக்கு மாகாண நிறுவனங்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு சரியான பரிந்துரைகளைத் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இதர சமூகக் கட்டமைப்புகளுக்கும் முன்வைக்கவேண்டும் என்று கதிரவெளியைச் சேர்ந்த கிராமியச் செயற்பாட்டாளர்கள் கூர்மை செய்தித்தளத்திற்கு எடுத்தியம்பினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.