சின்னத்திரை நடிகைக்கு ஜாமீன்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறையை போலீஸ் சீருடையில் விமர்சித்து கைதான நடிகை நிலானிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த மே 23ஆம் தேதி சின்னத்திரை நடிகை நிலானி என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் காவலர் உடையில், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். அவர் காவலர் உடையில் பேசியிருந்ததால் உண்மையாகவே போலீஸ் தான் இப்படி வெளியிட்டிருக்கிறார் என்பது போல் பரவியது அந்த வீடியோ.

இதனையடுத்து சென்னை வடபழனி காவல் நிலையத்தில் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் வடபழனி போலீஸார் ஒரு மாதம் கழித்து ஜூன் 20ஆம் தேதி குன்னூரில் நிலானியை கைது செய்தனர். குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை சென்னை வடபழனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர் . கைது செய்யப்பட்ட நிலானி ஜூன் 21ஆம் தேதி சைதாபேட்டை 17 குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப்ட்ட நிலையில் ஜூலை 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அங்காளேஸ்வரி உத்தரவிட்டார்.

இதையடுத்து புழல் சிறையில் பெண்கள் சிறப்பு சிறைக்கு நிலானி அனுப்பப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை நிலானி தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி இருந்த நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று (ஜூன் 28) நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.