வலது புறம் ஸ்ரீ சுதர்சனர் எழில்பொங்கும் அருளோடு !

அடையாறு அனந்த பத்மநாப கோயிலில் வலம் வந்துகொண்டிருக்கும்போது, வலது புறம் ஸ்ரீ சுதர்சனர் எழில்பொங்கும் அருளோடு நம்மை அழைக்கிறார். சுதர்சனரை நெருங்குவோம்.
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பஞ்சாயுதங்களிலும் ஸ்ரீ சுதர்ஸனரே முதன்மையானவர்.இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்)புலப்படுகிறது.இந்த்ராதி தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர். பெருமாளின் அம்சமாக ஸ்ரீ சக்கரத்தாழ்வார் விளங்குகிறார்.
‘புனரபி ஜனனம்–புனரபி மரணம் ‘மீண்டும்,மீண்டும் பிறந்து மரித்தல்' என்ற உலக நியதியான இயற்கை ,ஸ்ரீ சுதர்ஸனரை ஆதாரமாக கொண்டே நிகழ்கிறது.
“ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நச் சக்ர ப்ரசோதயாத் ” என்பது சுதர்சனரின் மூல மந்திரமாகும்.
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, ‘ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நம’ என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும் என்பது திண்ணம். அவரின் அருள் பெற்று அங்கிருந்து அடுத்த சில அடிகள் நகர ஸ்ரீகிருஷ்ணர் நம்மை அன்போடு அழைக்கிறார்.
அவரையும் வணங்கியவாறே சடாரியும் தீர்த்தத்தையும் பெற்றுக்கொண்டு பத்ப நாபனின் அருளை பரிபூரணமாக உணரலாம். எம்பெருமானின் ஶ்ரீசடாரி, ஆதிசேஷன் அம்சமாக விளங்குகிறது. அதனால், ஆகம முறைப்படி சடாரி மீது ஆதிசேஷன் ஆவாகனம் செய்யப்படுகின்றது. எம்பெருமான் திருவடிக்கு சமமான ஶ்ரீசடாரியை சாதித்துக் கொள்வது என்பது அவனின் திருவடிகளைப் பற்றினால் நிச்சயம் பலனுண்டு என்பதை விளக்குவதாக அமைகிறது. ஆழ்வார் திருநகரியில் ஶ்ரீநம்மாழ்வாரே சடாரியாக எழுந்தருளியிருக்கிறார் - என்ற ஐதீகம் உண்டு.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்
அடுத்ததாக நமக்கு ராஜ கம்பீரமாக அமர்ந்து அருள் பாலிக்கிறார் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர். ’நாளை என்பதே இல்லை நரசிம்மனிடத்தில்’ என்பது ஆன்றோர் வாக்கு. வேண்டியவர்களுக்கு வேண்டிய வரம் அருளும் வரப்ரசாதியானவர் ஸ்ரீ நரசிம்மர்
ஓம் வஜ்ர நாகாய வித்மஹே;
தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்! என்ற மந்திரத்தை மனமுருகி 18 முறை கூற ப்ரத்யக்ஷமாக ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் அருள்வதை உணர முடியும்
ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய், பழம், பசும் நெய், வஸ்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து அர்ச்சனை ஆராதனைகளால் வழிபாட்டை தொடங்கி நமது குற்றங்குறைகளை தீர்த்து நல்வழிகாட்டும்படி மனமுருகி ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு விட்டு, பிறகு வழிபாட்டை வீட்டில் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.
ஸ்ரீ அஷ்டா தசபுஜ துர்க்கை
அடுத்ததாக ஆனந்த பரவசத்தில் நம்மை திளைக்க வைப்பவர் ஸ்ரீ அஷ்டா தசபுஜ துர்கை. கருணை வடிவோடு,தாயன்பு திளைக்க, வேண்டுவோர்க்கு வேண்டும் வரத்தினை கேட்கும் முன்னே அளிக்கும் தசபுஜ துர்கையின் கருணைக் கண்களில் அவ்வளவு பிரகாசம். மகிஷன் மேல் கம்பீரமாய் நின்று நம் கஷ்டங்களை எல்லாம் களையும் அவ்வன்னையை விட்டு அகல மனமே வராது. ஆங்காங்கே பிரகாரங்களில் கருட,யானை,பூத வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் உற்சவத்திற்கு தயார் நிலையில் இருப்பதை காண முடியும்.
ஸ்ரீ அனுமன்
அடுத்ததாக துளசி மாலைகள் சூழ செந்தூர அழகோடு சிரித்துக்கொண்டே நம்மை வரவேற்கிறார் அனுமன்.
ஓம் ஆஞ்சநேயாய விதமஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹநுமந் ப்ரசோதயாத் என்று மனமுருகி வேண்டுவோர்க்கு வரமளிப்பதில் வல்லவர் அனுமன்.
சதாசர்வகாலமும் ராமபிரானையே வணங்கும் ராமபக்த அனுமன் பராக்கிரமம் நிறைந்தவர். நம் பாவங்களையெல்லாம் போக்கி அருளும் அனுமனை வணங்கி மீண்டுமொருமுறை சயன மூர்த்தியை காண மனது ஆர்ப்பரிக்கும் என்பது திண்ணம்.
நவ கிரகங்கள்
ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ" என்ற மந்திரத்தைச் சொல்லி மனமுருக வலம் வர சகல கஷ்டங்களையும் நீக்கி அருள்புரிகின்றனர் இத்தலத்து நாயகர்கள்.
வலது பக்கத்தில், அரசமரத்தடியில் அன்பே உருவாய் அருட்கடலாய் வருவோர் அனைவருக்கும் அருளை வாரி வழங்கிடுகிறார் அனந்தீஸ்வரர். எந்நேரமும் சிவ லிங்கத்தின் மேல் வாசனை தீர்த்தம் பொழியுமாறு அமைக்கப்பட்டு, அவரும் குளிர்ந்து பக்தர்களையும் குளிர்வித்து வருகிறார்.
இதுமட்டுமா, எத்தனை கும்பாபிஷேகங்கள், எத்தனை பிரம்மோற்சவங்கள், சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதசியில் ஒன்றரை லட்சம் பக்தர்கள் இத்திருக்கோவிலின் சொர்க்கவாசல் வழியே வந்து பரமனடி பற்றுகின்றனர். இவ்வாலயத்து இன்னும் பல அரிய செய்திகளையும் முனிவர்கள் வரலாற்றையும் அடுத்த கட்டுரையில் காண்போம்.
(ஆனந்தம் சனிக்கிழமை தொடரும்)
தீவிர பக்தர் - மின்னஞ்சல் polesorient@gmail.com

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.