மாவையை முதலமைச்சரை விடுவித்ததால் சீ.விக்கு நிறைய பிரச்சனையாம்??

ஆளணி மற்றும் பயிற்சி அலுவலகம் நடாத்தும் பெறுகை நடைமுறைகளும் ஒப்பந்த நிர்வாகமும் கற்கைநெறியின் சான்றிதழ் வழங்கும் வைபவமும் இணையத்தளத்தைத் திறந்து வைக்கும் வைபவமும் இன்று அன்றுகாலை 9.30 மணியளவில் யாழ் பொது நூலகம் கருத்தரங்க மண்டபத்தில் நடைபெற்றது.


இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் ஆற்றிய உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

“02.09.2016ந் திகதி எம்மால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பெறுகை நடைமுறைகள் மற்றும் ஒப்பந்தநிர்வாகம் தொடர்பான கற்கைநெறி மூன்றாவது கட்டத்தை இப்பொழுது எட்டியுள்ளது. இன்று இரண்டாவதுதொகுதிக் கற்கைநெறியில் தகுதிபெற்றவர்கள் 43 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

அத்துடன் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிஅலகிற்கானபுதிய இணையத்தளமும் UNDP யின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட உள்ளது. இந் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இரண்டாவது கற்கைநெறியில் 54 பேர் சேர்ந்திருந்தாலும் 43 பேரே அதனை முறையாக முடித்து இன்று சான்றிதழ் பெறுகின்றார்கள்.

மூன்றாவது கற்கைநெறிக்கு வடமாகாண அலுவலர்களிடம் இருந்து 144 விண்ணப்பங்கள் நாங்கள் பெற்றிருந்தாலும் பிரவேசப் பரீட்சையில் 60 அலுவலர்களே தேர்ச்சிபெற்று கற்கைநெறியை ஆரம்பிக்க உள்ளார்கள்.

ஏற்கனவே பதவிகள் பெற்றுள்ள எமது அலுவலர்களுக்கு இவ்வாறான கற்கைநெறிகள் எதற்காக என்ற கேள்வி எழுகின்றது. நாங்கள் வடமாகாணசபையை ஏற்றுக் கொண்டபோது அலுவலர்களிடையே பல குறைபாடுகளைக் கண்டோம். மிக சிரேஷ்ட அலுவலர்களாக இருந்தவர்கள் கூட தீர்மானங்களை எடுக்காது அவற்றை அரசியல்வாதிகளான எங்களிடம் கோவைகளைத் தள்ளிவந்தார்கள்.

ஏன் என்று ஆராய்ந்தபோது எமக்கு முன்னரான நிர்வாகம் ஒரு படைத்தளபதியின் நெறிப்படுத்தலின் கீழ்த் தான் நடந்து வந்தது என்று கண்டோம். அவர் “இணங்கு அல்லது இடத்தைக் காலி பண்ணு” என்ற முறையில்த்தான் நிர்வாகம் நடத்தி வந்ததாகக் கேள்விப்பட்டோம்.

ஆகவே பல பிழையான காரியங்களுக்கு எமது அலுவலர்கள் தலையாட்டி வந்தது மட்டுமல்லாது சிலர் பிழையை எவ்வாறு சட்டதிட்டங்களுக்கு அமைவாகச் சரிபோல் செய்வது என்று ஆளுநருக்கு அறிவுரை கொடுத்தும் வந்தார்கள் என்றும் கேள்விப்பட்டோம். அவ்வாறு செய்தவர்கள் ஆளுநருக்கு வேண்டியவர்கள் ஆனார்கள். முடியாது என்றவர்கள் ஒறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

நான் பதவி ஏற்றபோது பல கடிதங்கள் முதலமைச்சருக்கு வந்தவண்ணமே இருந்தன. அவற்றை என்னிடம் பாரப்படுத்தி அவற்றிற்கான தீர்மானம் எவ்வாறு எடுக்க வேண்டும் என்று பதிலை என்னிடம் எதிர்பார்த்தார்கள் சிரேஷ்ட அலுவலர்கள். இது தவறான ஒருமுறை என்று கண்டோம். ஏற்கனவே எவ்வாறு தீர்மானங்கள் அமைய வேண்டும் என்பதை பல கோவைகள், சுற்றறிக்கைகள் அலுவலர்களுக்குக் கூறிவந்திருந்தன. அனுபவமும் அவர்களுக்கு உதவிபுரிந்தன. ஆகவே அவற்றின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க அவர்களுக்கு முடியுமாக இருந்தது.

ஆனால் அவர்கள் தீர்மானங்களை எடுக்கத் தயங்கினார்கள். முன்னைய போர்வீர ஆளுநருக்கு சட்டம் ஒரு பொருட்டல்லாது இருந்தது. தனது தீர்மானங்களே சட்டமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார்.

இதனால் எமது அலுவலர்கள் சட்டத்திற்கும் ஆளுநரின் சங்கற்பத்திற்கும் இடையில் திண்டாடியே “நீங்கள் சொல்வதைப் போல்ச் செய்கின்றோம்” என்று அவர்முன் பணிந்து செயலாற்ற முன் வந்திருந்தார்கள்.

அவ்வாறான ஒரு அடிமை நிர்வாகசேவையுடன்தான் நாங்கள் எங்கள் பதவிக்காலத்தைத் தொடங்கினோம். சிலஅலுவலர்கள் வெளியாரின் ஆலோசனையின் படி முரண்டு பிடித்தார்கள். இவற்றிற்கெல்லாம் நாங்கள் முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

சிவில் சேவை என்பது மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு சேவையாக முன்பிருந்தது. எந்த பாராளுமன்ற உறுப்பினரோ மந்திரியோ அந்தக் காலத்தில் எதை வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அது சட்டத்திற்குப் புறம்பானதென்றால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது என்று தெளிவாக அவர்களுக்குக் கூறுபவர்களாக அக்கால சிவில் சேவை அலுவலர்கள் இருந்தார்கள்.

சிவில் சேவை போய் அதன் பின் நிர்வாகசேவை வந்தபோது கூட அந்த ஆரம்பகால அலுவலர்கள் மிக உயர்ந்த நியமங்களைக் கடைப்பிடித்தார்கள். ஆனால் 1970களில் மாற்றங்கள் ஏற்பட்டன.

கட்சிகளின் ஆதிக்கம் முன்னிலைக்கு வந்தது. நிர்வாக சேவை அலுவலர்களை நீக்கி கட்சிகளுக்கு அமைவானவர்களை அரசாங்கம் அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமித்தது. படித்த பேராசிரியர்களாக அவர்களுட் பலர் இருந்திருந்தாலும் அவர்கள் குறித்த கட்சிகளின் நலன் கருதியே நடந்து கொண்டனர்.

கட்சிகளின் அரசியல் ரீதியான கொள்கைகளுக்கு அமைவாக அலுவலர்கள் நடக்க வேண்டும் என்ற ஒரு புதிய நடைமுறை மெல்லமெல்ல பொதுநிர்வாக சேவைக்குள் நுழைந்தது. இதன் ஒரு நீட்சியாகவே இராணுவ அதிகாரி சிவில் அதிகாரம் பெற்றதும் கட்சி எதுவும் அவருக்கு இல்லையாயினும் ஆளும் கட்சிக்கு அமைவாகத் தான்தோன்றித்தனமாக அவர் கடமையாற்ற முற்பட்டார்.

ஆனால் நிர்வாக சேவை என்பது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. பக்கச்சார்பின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதொன்று. இந்த இடத்தில்த்தான் முகாமைத்துவ அபிவிருத்தி முக்கியத்துவம் பெறுகின்றது. ஒரு நிறுவனத்தை எவ்வாறு கொண்டு நடத்துவது என்பது பற்றிய அறிவே முகாமைத்துவ அறிவாகும்.

அதனை சாதாரணமாக எமது அடிப்படைப் பாடத்திட்டத்தினுளிருந்து பெற முடியாது. அதனை அனுபவமே எமக்கு ஊட்டிவிட வேண்டும். அலுவலர்களின் அன்றாட வேலைகள், அவர்களின் தகைமைகளைப் பரிசோதிக்கும் விதத்தில் ஏற்படும் சவால்கள், அவர்களின் தலைமைத்துவ அம்சங்களின் நிறைவும் குறைவும், காரியாலய சிரேஷ்டர்களுடன் சேர்ந்து காரியாலயங்களில் ஈடுபடும் உறவுமுறைகள் போன்ற பலவற்றையும் நாம் கற்றால்த்தான் எம்மால் எமது அலுவலகங்களில் திறம்பட வேலை செய்ய முடியும். ஆகவேதான் எமது அலுவலர்களின் தகைமைகளை முகாமைத்துவ கோட்பாடுகளின் அடிப்படையில் முன்னேற்றுவது, அபிவிருத்தி செய்வது அத்தியாவசியம் என்று கண்டு இந்தக் கற்கைநெறிகளை ஆரம்பித்தோம்.

தலைமைத்துவத்தில் இருந்து அரங்கத்தில் நடைமுறைப்படுத்துபவர் வரையில் பல இடைஅலுவலர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கிடையே தொடர்பாடல்கள் செய்திப் பரிமாற்றங்கள் அத்தியாவசியம். தலைமைத்துவம் அலுவலர்கள் அத்தனை பேருடனும் தொடர்பு வைத்திருக்க முடியாது. ஆகவே இடைஅலுவலர்கள் கொள்கை அல்லது பணிப்புக்கும், நடைமுறைப்படுத்தலுக்கும் இடையில் முக்கிய பங்கினை வகிக்கின்றார்கள். ஒவ்வொரு அலுவலருந் தனக்கு இஷ்டமான முறையில் நடந்து கொள்ளாது ஒரு செயல்முறைக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் இந்த கற்கைநெறிகள் உங்களுக்கு போதிக்கின்றன. பயிற்சியும் தேர்ச்சியும் உங்களை திறனுள்ளவர்களாக மாற்றும்.

இந்த கற்கைநெறி வகுப்புக்களுக்கு சும்மா கடமைக்கு வந்துவிட்டுப் போவதிலும் பார்க்க உங்கள் பயிற்சியை நீங்கள் கூடிய கவனத்துடன் பெற முன்வர வேண்டும். உங்களின் தகைமையுந் திறனும் நீங்கள் பதவிவகிக்கும் அமைப்புக்கு அல்லது திணைக்களத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். எதிலும் பயிற்சி பெறுவது என்பது உங்கள் தகைமைகளையுந் திறன்களையும் அதிகரிக்கச் செய்யும் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

1979ம் ஆண்டளவில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது நான் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி. மட்டக்களப்பைச் சேர்ந்த சட்டத்தரணி கௌரவ K.W.தேவநாயகம் அவர்கள் சட்ட அமைச்சராக அப்போது இருந்தார். நாங்கள் இருவரும் “குழந்தைகள் பராமரிப்பு” பற்றிய கருத்தரங்கமொன்றில் கலந்து கொண்டோம். அப்போது அங்கு ஒரு கருத்தை வெளியிட்டேன்.

பெற்றோருக்கு குழந்தைகளைப் பராமரிப்பது பற்றி நாங்கள் பயிற்சிகள் அளிப்பதில்லை. அதேபோல் நாட்டை ஆள்வது எப்படி என்பது பற்றி எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிப்பதில்லை என்று கூறி இருவருக்கும் பயிற்சி அவசியம் என்றேன். அமைச்சருக்குக் கோபம் வந்துவிட்டது. பல பழைய அரசியல்வாதிகளின் பெயர்களைக் கூறி அவர்கள் யாவரும் வாழ்க்கை என்ற பல்கலைக்கழகத்தில் அனுபவம் என்ற பயிற்சிபெற்றே அரசியலுக்கு வந்துள்ளார்கள் என்றார். “அப்படியானால் அவர்களின் பயிற்சி போதவில்லை” என்று நான் கூறியது அமைச்சரை மேலும் கோபம் அடையச் செய்தது. அதற்கும் மேலாக தற்போதைய தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவையும் காசிஆனந்தனையும் அதே காலகட்டத்தில் பிணையில் விடுவித்தமை அவரை அவரின் கோபத்தின் உச்சக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்க வேண்டும். சிலவாரங்களில் நான் சாவகச்சேரிக்கு மாற்றப்பட்டேன்.

நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால் எமது சகல நடவடிக்கைகளும் ஏற்கனவே பலரால் முகங்கொடுக்கப்பட்ட நடவடிக்கைகள். அவர்களின் அனுபவத்தில் இருந்துதான் நாங்கள் எங்கள் திறன்களையும் தகைமைகளையும் விருத்தி செய்யலாம். அந்த அடிப்படையில்த்தான் பெற்றோருக்கும் அரசியல் வாதிகளுக்கும் போதிய பயிற்சி வேண்டும் என்றேன். வருங்காலத்தில் அவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். அவ்வாறாக உங்களின் தகைமையை விருத்திசெய்யும் கற்கைநெறிகளே எம்மால் உங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. உங்களின் தேர்ச்சியும் திறனும் தகைமையும் கடைசியாக நிர்வாகத்திறனுக்கு வழிவகுப்பன என்பது மட்டுமல்லாமல் எமது போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சிறந்த ஒரு சேவையை உங்களூடாகப் பெறவும் வழி வகுக்கும்.

இன்று சான்றிதழ் பெறும் எமது அலுவலர்கள் பாராட்டுக்குரியவர்கள். மூன்றாம் கற்கைநெறிக்குள் சேர்க்கப்பட்டவர்களுக்கு எமது அன்பான ஆசிகள் உரித்தாகுக!

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

முதலமைச்சர்

வடமாகாணம். 
Powered by Blogger.