உலகக் கோப்பைக்கு உயிர் கொடுத்த CR7 #WorldCup #PORESP!

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து, மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்துவிட்டார். நாங்கள் அண்டர்டாக்ஸ் இல்லை, சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்று என்பதை போர்ச்சுகல் உணர்த்திவிட்டது.

மேட்ச் டிரா என்றாலும் இது போர்ச்சுகலின் வெற்றியாகவும், ஸ்பெயினின் தோல்வியாகவுமே கருதப்படுகிறது. உலகக் கோப்பை தொடங்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன் பயிற்சியாளரை மாற்றுவது எந்தளவு அணியைப் பாதிக்கும் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஸ்பெயின் தங்கள் வியூகத்தை ரீரைட் செய்யவேண்டிய நேரம் இது!
 ரொனால்டோ தனி ஆளா ஸ்பெயினுக்கு தண்ணி காட்டிய மொமன்ட்ஸ்! ஆல்பம்


ரஷ்யாவில் நடந்துவரும் 2018 உலகக் கோப்பையின் குரூப் சுற்றில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள யூரோ சாம்பியன் போர்ச்சுகல், முன்னாள் உலக சாம்பியன் ஸ்பெயின் அணிகள் சோச்சியில் நேற்றிரவு மோதின. இதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் தரவரிசையில் பின்தங்கியிருந்த அணிகள் மோதியதால், ஸ்பெயின் – போர்ச்சுகல் ஆட்டம் ஹெவிவெயிட் சாம்பியன் ஆட்டம் போல இருக்கும் என வர்ணனை செய்தனர். வர்ணனையாளர்கள் சொன்னதைப் போலவே ஆட்டம், அவ்வளவு கிளாசிக்காக இருந்தது. ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்தில் கோல், இடைவேளைக்கு ஒரு நிமிடத்துக்கு முன்பு ஒரு கோல், ஆட்டம் முடிவதற்கு இரண்டு நிமிடங்கள் இருக்கும்போது ஒரு கோல், தனி நபர் ஒருவரின் ஹாட்ரிக் கோல், டிஃபண்டர் அடித்த கோல் என ஒவ்வொரு கோலும், ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கடைசி நிமிடம் வரை சுவாரஸ்யம் குறையவில்லை.


மேட்ச் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே ரொனால்டோவின் `ஆட்டம்’ ஆரம்பித்துவிட்டது. பெனால்டி பாக்ஸில் வைத்து ரொனால்டோவை நாசோ பெளல் செய்ய, போர்ச்சுகலுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கொடுத்தார் ரெஃப்ரி. நாச்சோவால் நம்பமுடியவில்லை. செர்ஜியோ ரமோஸால் நம்பமுடியவில்லை. ஸ்பெயின் வீரர்களால் நம்பமுடியவில்லை. இது ஃபெளலா? டிராமாவா? பெனால்டிக்கு வொர்த்தா? ரெஃப்ரியிடம் மன்றாடுகிறார் செர்ஜியோ ரமோஸ். ரெஃப்ரி சைலன்ட்டாக ஸ்பாட் கிக் அடிக்கும் இடத்தை நோக்கி கைகாட்ட, ரொனால்டோ தன் டிரேட்மார்க் ஸ்டைலில் நிற்கிறார். ஸ்பெயின் கோல் கீப்பர் டீ கே, ரொனால்டோவை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு தன் இடத்துக்குச் செல்கிறார். இந்தத் தருணத்துக்காகவே காத்திருந்தது போல, உதடு குவித்து மூச்சை இழுத்துவிட்டு, கோல் கம்பத்தின் வலது பக்கம் நோக்கி வலுவாக ஒரு ஷாட் அடிக்கிறார் CR7. அதற்கு நேர் எதிர் திசையில் தனக்கு வலது பக்கமாக டைவ் அடிக்கிறார் டீ கே. பிரிமியர் லீக் தொடரின் பெஸ்ட் கோல் கீப்பர் எனப் பெயரெடுத்த டீகேவால் பந்தைத் தடுக்க முடியவில்லை. ரொனால்டோவைத் தடுக்க முடியவில்லை. ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்திலேயே கோல் கன்சீட் செய்வதைத் தடுக்கமுடியவில்லை. போர்ச்சுக்கல் முன்னிலை பெறுவதையும் தடுக்க முடியவில்லை.


ரொனால்டோ


முக்கியமான போட்டியில், முக்கியமான தருணத்தில் விஸ்வரூபம் எடுப்பவர்கள் ஜாம்பவான்கள். ரொனால்டோ ஜாம்பவான். கேப்டன் என்ற முறையில் Leading from front என்பதன் அடையாளமாகத் திகழ்ந்ததோடு, பங்கேற்ற நான்கு உலகக் கோப்பைகளிலும் (2006, 2010, 2014, 2018) கோல் அடித்தவர் என்ற பெருமை பெற்றார். போதாக்குறைக்கு உலகக் கோப்பையில் முதல் கோல் அடித்த எந்த மேட்ச்சிலும் போர்ச்சுக்கல் தோற்றதில்லை எனப் புள்ளிவிவரங்களை எடுத்துவிட்டார்கள்.


மறுமுனையில், கடந்த உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக வாங்கிய கோல்கள் ஸ்பெயின் ரசிகர்களின் மனக்கண்ணில் வந்துபோனது. `அவ்ளோதானா… இந்தவாட்டியும் குரூப் ஸ்டேஜோட காலியா…’ ஸ்பெயின் ரசிகர்கள் மனதில் ஏராளமான கேள்விகள். ஆனாலும், அவர்கள் நம்பிக்கையிழக்கவில்லை. இனியஸ்டா அவர்கள் நம்பிக்கைக்கு உரமேற்றினார். 20-வது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸில் புகுந்து வித்தை காட்டினார். கோலாகவில்லை என்றாலும், கோல் அடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொடுத்தது அவரது மேஜிக்.

22-வது நிமிடத்தில் போர்ச்சுகல் துரிதகதியில் ஒரு கவுன்ட்டர் அட்டாக் கொடுத்தது. இரண்டே பாஸ்களில் ஸ்பெயினின் பெனால்டி பாக்ஸுக்கு வந்துவிட்டது பந்து. ரொனால்டோ அதை அப்படியே டிரிபிள் செய்து கோல் அடித்திருக்கலாம். என்ன நினைத்தாரே சக வீரருக்கு பாஸ் கொடுத்தார். அற்புதமான பாஸ். ஆனால், அது கோல் ஆகவில்லை. ஸ்பெயினின் டிஃபன்ஸ் ஆட்டம் கண்டது.

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் ஸ்பெயின் பதிலடி கொடுத்தது. மைதானத்தின் நடுவில் இருந்து வந்த லாங் பாஸை வாங்கும்போது போர்ச்சுகல் டிஃபண்டர் பெப்பேவிடம் மல்லுக்கட்டி லாகவமாக பந்தை தன்வசப்படுத்தினார் டியாகோ கோஸ்டா. அவருக்கு முன்னே இரண்டு டிஃபண்டர்கள். அருகே சக ஸ்பெயின் வீரர்கள் யாரும் இல்லை. ஆனால், அதற்குள் இன்னும் இரண்டு டிஃபண்டர்கள் சுற்றிவளைத்துவிட்டனர். என்ன செய்யலாம்? லேசாக டிரிபிளிங் செய்து பார்த்தார் கோஸ்டா. டிஃபண்டர்கள் அசையவில்லை. வேலைக்காகாது என இருந்த இடத்தில் இருந்தே இலக்கை நோக்கி ஒரு ஷாட் அடித்தார். வாட்டே ஷாட். வாட்டே கோல். ஆட்டம் 1-1 என சமநிலை. இப்போது போர்ச்சுக்கல் வீரர்கள் முகத்தில் ஈயாடவில்லை.


இது ஹெவிவெயிட் சாம்பியன்களின் மோதல் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இருந்தது முதல் அரை மணி நேர ஆட்டம். பெனால்டி கிக், கோல், யெல்லோ கார்டு, கோல் லைன் டெக்னாலஜி, ஆஃப் சைட், செட் பீசஸ், கார்னர் கிக் என அரை மணி நேரத்தில் பெஸ்ட் மேட்ச்சுக்குரிய சகல அம்சங்களும் அரங்கேறின. `இதான்டா மேட்ச்’ என நிமிர்ந்து உட்கார்ந்தனர் ரசிகர்கள். ஸ்பெயின் பக்கம் இஸ்கோ இலக்கை நோக்கி ஷாட் அடித்தார். அவரால் ஷாட் ஆன் டார்கெட்தான் அடிக்கமுடிந்தது. ஆனால், அவரது சக ரியல் மாட்ரிட் கிளப் வீரரான கிறிஸ்டியானோ, 44-வது நிமிடத்தில் இரண்டே டச்சில் வசமான சம்பவம் செய்தார். ஆம், இரண்டாவது கோல்.


லெஃப்ட் ஃபுட், கோல் கம்பத்தின் இடதுபுறம் என முந்தைய கோலுக்கு அப்படியே முரணாக இருந்தது இந்த கோல். இந்தமுறை டி கே கையில் பட்டு, கோல் வலைக்குள் தெறித்து விழுந்தது பந்து. டீ கே இதைத் தடுத்திருக்கலாம். ப்ச்… செட் பீஸை மட்டுமல்ல தேவைப்பட்டால், எப்பேற்பட்ட டிஃபன்ஸையும் உடைத்து ஃபீல்ட் கோல் அடிக்க முடியும் என நிரூபித்தார் ரொனால்டோ. தலைமேல் கைவைத்தனர் ஸ்பெயின் ரசிகர்கள். முதல் பாதி முடிவில் 2-1 என போர்ச்சுகல் முன்னிலை பெற்றது. உற்சாகமாக டிரெஸ்ஸிங் ரூமுக்கு விரைந்தார் ரொனால்டோ. அவருக்கு முன்னே விரக்தியுடன் விரைந்தனர் ஸ்பெயின் வீரர்கள்.


15 நிமிட இடைவெளியில் டிரெஸ்ஸிங் ரூமில் என்ன பேசினார்களோ… ஸ்பெயின் இரண்டாவது பாதியில் உக்கிரமாக இருந்தது. பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. 55-வது நிமிடத்தில் சிவனேன்னு இருந்த இனியஸ்டாவை பெளல் செய்து கீழே தள்ளிவிட்டார் போர்ச்சுகல் வீரர். ஸ்பெயினுக்கு ஃப்ரி கிக் கிடைத்தது. டேவிட் சில்வா நேர்த்தியாக கொடுத்த பாஸை, புஸ்கட்ஸ் தலையால் முட்டி விட, அதை நொடியும் தாமதிக்காது வலைக்குள் அனுப்பி வைத்தார் டியாகோ கோஸ்டா. ஸ்கோர் 2-2. பெருமூச்சுவிட்டது ஸ்பெயின். என்ன நடந்தது என யூகித்து சுதாரிப்பதற்குள் அடுத்த கோலை அடித்தது ஸ்பெயின். லெஃப்ட் விங்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக டிரிபிள் செய்து, போர்ச்சுகல் டிஃபன்ஸுக்கு தண்ணி காட்டினார் இஸ்கோ. ஆனால், கோல் அடித்தது டிஃபண்டர் நாசோ. போர்ச்சுகல் டிஃபண்டர்கள் கிளியர் செய்யத் தவறிய பந்து, பாக்ஸுக்கு வெளியே வந்தபோது, அங்கே தேவுடு காத்திருந்த நாசோ ஹாஃப் வாலியில் அட்டகாசமாக ஒரு ஷாட் அடித்தார். பந்து தங்குதடையின்றி கம்பத்தில் புகுந்தது. 3-2. வாட்டே கம்பேக். 54-வது நிமிடம் வரை 2-1 என போர்ச்சுகல் முன்னிலையில் இருந்தது. 58-வது நிமிடத்தில் ஸ்பெயின் 3-2 என முன்னிலை பெற்றது. இதுதான் ஃபுட்பால்! 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.