இந்து சமய விவகார பிரதி அமைச்சா் பதவியா? ஏற்றுக் கொள்ள முடியாது!!

தமிழ் மக்களும், இஸ்லாமிய மக்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் நிலையையே இலங்கை அரசாங்கம் விரும்புகிறது. அதனாலேயே இஸ்லாமியர் ஒருவருக்கு இந்தசமய விவகார பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது.

மேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். இன்று பிற்பகல் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், இந்து சமய விவகார அமைச்சராக இந்து மதத்துடன் எந்தவித சம்மந்தமும் இல்லாத ஒருவரை நியமித்திருப்பதை எங்களைப் பொறுத்த வரையில் ஏற்றுக் கொள்ள முடியாது.

அத்தகைய செயற்பாட்டிற்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆயினும் இந்த நியமனம் என்பது திட்டமிட்ட வகையில் தமிழ் முஸ்லிம் உறவைப் பாதி க்கும் வகையிலே அரசினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னரான நாட்களில் நடக்கின்ற ஒவ்வொரு விடயங்களையும் எடுத்தக் கொண்டால் அரசின் திட்டமிட்ட அனைத்துச் செயற்பாடகளையும் சரியாக விளங்கிக் கொள்ள கூடியதாக இருக்கும்.

அவ்வாறு இலங்கைத் தீவில் நடைபெறுகின்ற ஒவ்வொரு விடயங்களைப் போன்றதாகவே மஸ் தானின் பிரதி அமைச்சர் நியமனமும் இருக்கின்றது. இங்கு தமிழ் மக்கள் மீது கலாச்சாரங்க ளைத் திணித்து தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையில் மதரீதியிலான

வேறுபாடுகளை ஏற்படுத்துகின்ற திட்டமிட்ட செயற்பாடுகளையே அரசாங்கம் ஏற்படுத்த முனைகின்றது. மேலும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒருவரையொருவர் எதிரிகளாகப் பார்த்து மோத வைக்கின்றதான நிலைமைகளே ஏற்படுத்தப்படுகின்றது.

ஆனால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் எதிரிகளாகப் பார்த்த நிலைமை கிடையாது. இருந்தும் அரசால் அத்தகைய செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக வே மஸ்தானின் அமைச்சர் நியமனத்தையும் பார்க்க வேண்டும்.

ஆகவே எங்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சனைகளை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். எங்களுக்கிடையே எதிரிகளாகப் பார்க்க கூடாது. இந்த விடயத்தில் அனைத்து தமிழ் பேசும் மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.

இலங்கைத் தீவில் தமிழின விரோதச் செயற்பாடுகளை கட்சி பேதமின்றி தெற்கிலிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அதாவது தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்க இக்கட்சிகள் தயாராக இல்லை. அவர்கள் தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கான வேலைகளையே செய்து வருகின்றனர்.

ஆகவே தமிழ் பேசும் மக்களாக நாங்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.