நீட் தேர்வுக்கு பலியான மற்றொரு மாணவி!

நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாத விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நேற்றிரவு விஷமருந்த தற்கொலை செய்து கொண்டார்.
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் நீட் தேர்வு தமிழகத்திற்கு அவசியமில்லை என கூறி கடந்த ஆண்டு பெரும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் கடைசி வரை நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு  கிடைக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இது போன்று இனி ஒரு சம்பவம் நடக்ககூடாது என அப்போது அனைவருமே பேசினர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு மதிக்கவில்லை.
ஆனாலும் இந்த ஆண்டு மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாரானார்கள். அப்போதும் தமிழக மாணவர்களை  மத்திய அரசு வஞ்சித்தது. தமிழக மாணவர்களுக்கு நீட் எழுதும் மையங்களை கேரளா, மாகாராஷ்ட்ரா என பல வெளி மாநிலங்களில் ஒதுக்கியது.
இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழகத்தில் இருந்து 114602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது 39.55 சதவீத தேர்ச்சி ஆகும். தமிழகத்தில் கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் இவர் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.  
இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நேற்று இரவு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரதீபாவின் இந்த மரணம் மீண்டும் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.