வட மாகாணத்தில் மீண்டும் புலிகள் எனும் பார்வையில் தேடுதல்!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் - பேராறு பகுதியில் 15 கிலோ கிளைமோர் குண்டு உட்பட சில ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


ஒட்டுசுட்டான் - பேராறு வீதியில் குறித்த வெடி பொருட்களுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டியிலிருந்து தப்பிச் சென்ற மற்றுமொருவரைத் தேடி வட மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

நேற்றுக் காலை 5.30 மணி அளவில் குறித்த வெடி பொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் புதுக்குடியிறுப்பு பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினால் குறித்த முச்சக்கர வண்டி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, அதிலிருந்து 120 ரி-56 ரக தோட்டக்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான 2 கைக் குண்டுகள், 6 தொலைவுக் கட்டுப்பாட்டுக் கருவிகள், வனப்பகுதியில் மறைந்திருப்பதற்காக அவர்கள் பயன்படுத்திய உடைகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களும் இதன்போது மீட்கப்பட்டன.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்ட சட்டம், ஒழுங்குகள் இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகத்துக்குரியவர் தொடர்பில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்தான், குறித்த முச்சக்கரவண்டிச் சாரதியையும், மற்றுமொருவரையும் இரவு நேரத்தில் பயணமொன்றுக்கு அழைத்து, கிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிறுப்பு வீதியில் அதிகாலை ஒரு மணியளவில் பயணித்ததாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான தகவல்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரினால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.