பௌத்தசாசனமைச்சராக ஜனாதிபதி யாரை நியமிப்பார்?

பௌத்த சாசன அமைச்சராக ஒரு முஸ்லீமையோ, கிறிஸ்தவரையோ ஜனாதிபதி நியமிக்க மாட்டார். அவ்வாறு இருக்கின்ற போது எவ்வாறு இந்து சமய விவகாரங்களைக் கவனிப்பதற்காக ஒரு முஸ்லீம் அமைச்சரை நியமித்திருக்கின்றார் என்ற பெரிய கேள்வி எழுந்திருக்கின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.


இந்து விவகார பிரதி அமைச்சராக கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஓரிரு நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி சில பிரதியமைச்சர்களை நியமித்திருக்கின்றார். அதில் இந்து விவகார பிரதியமைச்சராக ஒரு முஸ்லீம் ஒருவரை நியமித்திருப்பது மிகப் பெரும் அதிசயமாக இருக்கின்றது. அவர் ஏன் இவ்வாறு சிந்தித்தார் என்று நாங்கள் ஆச்சரியப்பட்டவர்களாக இருக்கின்றோம்.

ஒரு பௌத்த சாசன அமைச்சராக ஒரு முஸ்லீமையோ, கிறிஸ்தவரையோ ஜனாதிபதி நியமிக்க மாட்டார். அவ்வாறு இருக்கின்ற போது எவ்வாறு இந்து சமய விவகாரங்களைக் கவனிப்பதற்காக ஒரு முஸ்லீம் அமைச்சரை நியமித்திருக்கின்றார் என்ற பெரிய கேள்வி எழுந்திருக்கின்றது.

நாங்கள் ஒரு சிறந்த வேலைத்திட்டத்திற்காக அரசுக்கு இணக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில் அரசியலமைப்புச் சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். எமது உரிமைகளை நாங்கள் எழுதி எடுக்க வேண்டும்.

எமது பிரதேசங்களில் எமக்கான உரிமைகளை நாங்கள் பெற்றுக் கொண்டு அதனூடாக அபிவிருத்திகளைச் செய்ய வேண்டும். வடக்கு கிழக்கு பிரதேசங்கள் ஏனைய பிரதேசங்களை விட வித்தியாசமனது.

தமிழ் மொழி, தமிழ் மக்களின் வாழ்வு, கலாசாரம் என்பவற்றைப் பாதுகாக்கக் கூடிய விதத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டக் கூடிய ஒரு அரசியலமைப்பை உருவாக்க விட வேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புகளை வழங்குகின்றோம்.

ஆனால் அவ்வாறு நாங்கள் ஒத்துழைத்துச் செயற்படுகின்ற போது ஜனாதிபதி மேற்கொள்கின்ற இவ்வாறா விடயங்கள் எங்களை மிகவும் சங்கடத்திற்குள்ளாக்குகின்றது. இவ்வாறு செயற்பட்டு இதன்மூலம் நாங்கள் அவரோடு சேர்ந்து வெலை செய்ய முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா? என்ற கேள்வி எங்களுக்குள் எழுகின்றது.

ஏனெனில் நாங்கள் தற்போது சர்வதேசத்துடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கின்றோம். சர்வதேசம் சொல்லுகின்றது நீங்கள் கடுமையாகப் பொறுமை காத்து உங்களுடைய அலுவல்களை செய்து முடியுங்கள் என்று. அவ்வாறு நாங்கள் பொறுமையுடன் இருக்கும் போது இனிமேல் வேலை செய்ய முடியாது

என்ற நிலைமைய உருவாக்கக் கூடிய விதத்தில் அரசாங்கம் செயற்படுகின்றதா? என்ற கேள்வியும் இந்த செயற்பாட்டின் மூலம் எழுகின்றது.

நான் நினைக்கின்றேன் இது பிழையான செயற்பாடு என்பதை ஜனாதிபதி உடனடியாக அறிந்து கொள்வார். ஆகவே இதனை உடனடியாகவே திருத்திக் கொள்வார். அந்தவகையில் உடனடியாக இந்த இந்து அலுவல்கள் பிரதியமைச்சர் பதவியை ஒரு இந்துவுக்கு அவர் வழங்குவார் என்று நினைக்கின்றேன்.

அதன் மூலம் இந்த நாட்டில் இருக்கின்ற சுமூக நிலையைக் குழப்பாமல் ஜனாதிபதி அவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று எமது மக்கள் சார்பாக அவருக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.