பொய்யைப் பரப்பும் ஊடகங்கள்: ட்ரம்ப்!

ஜி 7மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர்
பக்கத்தில் வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மற்ற நாட்டுத் தலைவர்களுடன் தான் சுமுகமான உறவைக் கடைபிடிக்கவில்லை என்று ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளை அங்கமாகக் கொண்ட ஜி -7 உச்சி மாநாடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் உலகம் முழுக்க வைரலானது. புகைப்படத்தில், ஜி 7இல் அங்கம் வகிக்கும் மற்ற நாட்டுத் தலைவர்களெல்லாம் நின்றுகொண்டிருக்க, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களுடன் அமர்ந்துகொண்டே உரையாடும்படி இருந்தது.
மாநாட்டை அவசரமாக முடித்துக் கொண்டு சிங்கப்பூர் கிளம்பிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அங்கு வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்தார். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்நிலையில் பயணம் முடிந்து அமெரிக்கா திரும்பியுள்ள ட்ரம்ப், வைரலான புகைப்படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். மற்ற நாட்டுத் தலைவர்களுடன் தான் சுமூகமாக பழகவில்லை என்று ஊடகங்கள் பொய் செய்திகளை பரப்புகின்றன என தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டித்துள்ள ட்ரம்ப், ஊடகங்கள் கூறியதை மறுக்கும் வண்ணம் தலைவர்களுடன் உரையாடிய புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.
"பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்கள் கனடாவில் நடைபெற்ற ஜி 7மாநாட்டில் மற்ற நாட்டுத் தலைவர்களுடன் நான் சுமூகமாக பழகவில்லை என்று கூறியுள்ளன. இது தவறானது" என்று குறிப்பிட்ட ட்ரம்ப், "ஜெர்மனி அதிபர் ஏஞ்சலினா மொர்கலுடன் நான் சிறப்பான நட்பு வைத்துள்ளேன். ஆனால் பொய் செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள், மாநாட்டில் எடுக்கப்பட்ட மோசமான புகைப்படங்களை (கோபமாக இருக்கும் படம்) மட்டும் வெளியிட்டுள்ளன. மாநாட்டில் எந்த அமெரிக்க அதிபரும் பேசாத விஷயங்களை மற்ற நாட்டுத் தலைவர்களுடன் நான் பேசினேன்" என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.