வெனிசூலாவில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்த சர்வதேச விசாரணைக்கு அழைப்பு!

வெனிசூலாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றமை தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஸெய்ட் அல் ஹூசெய்ன் அழைப்பு விடுத்துள்ளார்
.

வெனிசூலா அரசால் திட்டமிட்டு நடாத்தப்படும் மனித உரிமை மீறல்களையும் பொதுமக்கள் தொடர்ச்சியாக பாதுகாப்புப் படைகளால் கொலை செய்யப்பட்டு வருவதையும் விசாரணை செய்வதற்காகவே ஆணையாளர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

அந்நாட்டுப் பாதுகாப்புப் படைகளால் கடந்த 3 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் பாதுகாப்புப் படைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கம் தவறியுள்ளதாகவும் வன்முறைகள் பாரியளவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இதற்காக மிக உயர்ந்த ஆய்வுக் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடாத்த வேண்டுமெனவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பமட்ட விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவிற்கு (Nicolas Maduro) எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பமட்ட விசாரணைகளை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.