அதிமுக அலுவலகங்களாக மாறிய அரசு பயணியர் விடுதிகள்!

அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் அரசு விருந்தினர் மாளிகையையும் சுற்றுலா மாளிகையையும்தான் கட்சி அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

மாவட்டத் தலைநகரங்களிலும் வட்டாரத் தலைநகரங்களிலும் சுற்றுலா மாளிகை மற்றும் விருந்தினர் மாளிகைக் கட்டும் கலாச்சாரம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கியது. ஆட்சிப் பணிகளைக் கவனிக்கவும், மக்களைச் சந்திக்கவும் வரும் ஆங்கிலேய அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் தங்கி பணிகளைக் கவனித்துவிட்டும், ஓய்வெடுத்துவிட்டும் செல்வர்.



நாடு சுதந்திரமடைந்த பிறகு பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது தனியார் இடத்தில் தங்காமல் இருக்க மாவட்டத் தலைநகரங்களிலும் வட்டாரத் தலைநகரங்களிலும் அரசு செலவில் விருந்தினர் மாளிகைகள் கட்டப்பட்டன. இவை பொதுப்பணித் துறை பராமரிப்பில் இருந்து வருகின்றன.



தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவுக்குப் பல மாவட்ட தலைநகரங்களில் கட்சி அலுவலகம் இல்லை. எம்.எல்.ஏ அலுவலகம் இருந்தும் அதனைப் பயன்படுத்தாமல் மூடிவைத்துள்ளனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் அரசு சுற்றுலா மாளிகையைத்தான் கட்சி அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வும் சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சட்டமன்ற அலுவலகத்துக்குப் போவதே இல்லை. முக்கிய கட்சி நிகழ்ச்சி என்றால் மட்டும் கட்சி அலுவலகத்துக்குச் சென்றுவருவார். மற்ற நாட்களில் முழுமையாக அரசு விருந்தினர் மாளிகையைத்தான் கட்சி அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார் என்கிறார்கள் விழுப்புரம் தொகுதிவாசிகள்.


கடலூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான எம்.சி.சம்பத், இன்று வரையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கால் எடுத்துக் கூட வைத்தது இல்லை. கட்சி அலுவலகமும் இல்லை என்பதால் அரசு சுற்றுலா மாளிகையைக் கட்சி அலுவலகமாக மாற்றிக்கொண்டார் என்பது கடலூர் தொகுதி மக்களின் குற்றச்சாட்டு.


எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் கட்சி அலுவலகங்களைப் பயன்படுத்தாமல் சுற்றுலா மாளிகையையும், விருந்தினர் மாளிகையையும் பயன்படுத்தி வருவதற்குக் காரணம் என்னவென்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இங்குள்ள கம்ப்யூட்டர்களையும், பிரின்டர்களையும் பயன்படுத்திக்கொள்கின்றனர். 


அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் உதவியாளர்களும், கட்சி பொறுப்பாளர்களும் அறைகளிலுள்ள ஏசியைப் போட்டுக்கொண்டு ஓய்வு எடுக்கிறார்கள். மேலும், கார் பார்க்கிங் வசதியும் உள்ளது. அறைகளைச் சுத்தம் செய்வதற்கும் பெட்ஷீட் மாற்றிக் கொடுக்கவும் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். எனவே சொகுசாக இருக்கலாம் என்பதால் இங்கு வந்துவிடுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கில் மின் கட்டணம் வரும். அதை முழுவதும் அரசு செலுத்துகிறது" என்று கூறினார்.


ஆனால், இதற்கு நேர்மாறாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முழுமையாகப் பயன்படுத்தி வருகிறார். ஜெயலலிதா இறந்த மூன்றாவது நாளிலே எம்.எல்.ஏ அலுவலகத்தில் ஜெ. சிலையை வைத்தார். அதேபோல் சொந்தமாகக் கட்சி அலுவலகத்தைக் கட்டி பயன்படுத்தி வருகிறார் என்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.


அதே மாவட்டத்தில் இருக்கும் கந்தர்வக்கோட்டை (தனி) எம்.எல்.ஏ ஆறுமுகம், இவருக்கு எம்.எல்.ஏ அலுவலகம் எங்கு இருக்கிறது என்றே தெரியாது எனக் குற்றம்சாட்டுகின்றனர் அவரது தொகுதி மக்கள். “தொகுதி பிரச்சினை குறித்து மனு கொடுக்க நாங்கள் அன்றாடம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்குச் சென்று வருகிறோம். 


ஆனால், எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு வருவதே இல்லை. அவரைக் காணவில்லை. எனவே கண்டுபிடித்துத் தாருங்கள்” என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவும் அளித்துள்ளனர் தொகுதி மக்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.