தூத்துக்குடியில் விஜய் கேட்ட மன்னிப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக நடிகர் விஜய் நேரில் சென்று வந்திருக்கிறார்.


தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் பலரும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனத்தையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் தெரிவித்தனர். நடிகர்கள் கமல், ரஜினி ஆகிய இருவரும் நேரில் சென்றுவந்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து நீட் தேர்வு முடிவுகள் மற்றும் அதனால் தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் பக்கம் அரசியல் தலைவர்களின் பார்வை திரும்பி, தூத்துக்குடி மீடியாவின் கேமரா வெளிச்சத்திலிருந்து விடுபட்டது. இந்த சூழலுக்காகக் காத்துக்கொண்டிருந்தவர் போல, திடீரென்று திட்டமிடாத பயணமாக தூத்துக்குடிக்கு கிளம்பினார் விஜய். மதுரை விமான நிலையத்தில் இறங்கியவர், அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி எல்லையை அடைந்தார்.



நடு சாமத்தில் கார் ஒன்று ஊருக்குள் வந்தால் மக்கள் பீதியடைவார்கள் என்றும், காவல் துறையின் கண்காணிப்பிலிருந்து ஊர் இதுவரையிலும் விடுபடவில்லை என்றும் விஜய்க்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஊரின் தெருக்களை அறிந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இருவரை பைக் கொண்டுவரச் சொல்லி பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்றார் விஜய்.



அக்கம்பக்கத்தினரின் தூக்கம் கெடும்படி யாரையும் படமெடுக்கவோ, கூச்சல் போடவோ அனுமதிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவர் அங்கே புகைப்படம் எடுத்தவர்களிடமும் கையெடுத்துக் கும்பிட்டு வேண்டாம் என மறுத்திருக்கிறார். என்ன நடந்தது? யார் காரணம்? என்றெல்லாம் எவ்வித சம்பிரதாய பேச்சுக்கும் இடம்கொடாமல், “நான் வரக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. மன்னித்துக்கொள்ளுங்கள். என்ன ஆறுதல் சொன்னாலும் உங்கள் இழப்பை ஈடுகட்ட முடியாது. உங்கள் மகனாக நினைத்து, தவறாக எடுத்துக்கொள்ளாமல் இதை வைத்துக்கொள்ளுங்கள்” என ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

எவ்வளவு தடுத்தும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிவிட, அவற்றைப் பார்த்த தூத்துக்குடி விஜய் ரசிகர்கள் இரவு நேரத்திலேயே சாலைகளில் ரோந்து வந்திருக்கின்றனர். ஆனால், அதற்கு முன்பே மதுரைக்கு வந்து சேர்ந்துவிட்டிருந்தார் விஜய்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.