ரூ. 2 கோடி மதிப்புள்ள மரகத சிலை, தங்கவேல் திருட்டு!

சோழவரம் அருகே கோவிலில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதத்தால் செய்யப்பட்ட முருகன் சிலை மற்றும் தங்க வேல் திருடப்பட்டுள்ளது, குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தை அடுத்த அலமாதியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவக்குமார் குடும்பத்தினருக்குச் சொந்தமான தங்க வேல் முருகன் கோவில் உள்ளது. இக்கோயிலில் பூஜைகள் எல்லாம் அவரே செய்துவருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோவிலில் மூலவர் சிலையின் கால் பகுதிக்கு அருகில் ஒரு அடி உயரமுள்ள மரகத முருகன் சிலையும், அந்தச் சிலையின் கையில் தங்க வேல் ஒன்றும் இருந்தது. இவை இரண்டும் சேர்த்து 2 கோடி ரூபாய் மதிப்புடையவை என்று கூறப்படுகிறது.

முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து வழிபாடுகள் செய்வார்கள். நேற்று இரவு அமாவாசை சிறப்பு வழிபாடுகளை முடித்து கோவிலை பூட்டிவிட்டு அர்ச்சகர் புறப்பட்டுச் சென்றனர். வழக்கமாக இரவு நேரங்களில் கோவிலில் பாதுகாப்புக்காக ஒருவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஜூலை 13) காலை கோவிலுக்கு வந்த சிவக்குமார், கருவறை கதவை திறந்து வைத்து விட்டு பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார். பின்னர் கோவில் வளாகத்திற்குச் சென்று விட்டு சிவக்குமார் திரும்பி வந்தபோது, கருவறையில் இருந்த மரகத முருகன் சிலை மற்றும் ஒரு அடி உயரம் உள்ள வெள்ளி வேலைக் காணவில்லை.

இதுகுறித்து, சோழவரம் காவல் நிலையத்தில் சிவக்குமார் புகார் அளித்தார். தகவல் அறிந்ததும் பொன்னேரி டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் பலசுப்பிரமணி மற்றும் காவலர்களும் கோவிலுக்குச் சென்று விசாரணை நடத்தினர். கோவிலில் கண்காணிப்பு கேமிரா இல்லாததால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக, காவல் துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சிலை கடத்தல் கும்பலை பிடிக்கத் தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.