ரெஜினா என்ற பெயரே மாறிக் கொண்டிருக்கிறது! நீதி என்பதன் பொருளென்ன?: பார்த்தீபன்!

ரெஜினாவுக்கு நீதி வேண்டும் என்ற வாக்கியம் உண்மையில் எல்லோருக்கும் பழகிப் போனதொரு விடயம். இங்கே ரெஜினா என்ற பெயர் மாத்திரமே மாறிக்
கொண்டிருக்கின்றது. ஆனால், நாங்கள் நீதி வேண்டும்…நீதி வேண்டும்…என இன்றும் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றோம். இங்கு நீதி என்பதன் பொருளென்ன? எனக் கடும் ஆதங்கத்துடன் கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் ரெஜினாவுக்கு நீதி வேண்டும். வித்தியாவுக்கு நீதி வேண்டும் என்ற கூக்குரல்கள் இங்கு ஒலிக்கின்ற அதேவேளை இந்தக் கூக்குரல்கள் தொடராதிருக்க மக்கள் ஒன்றுதிரள வேண்டுமென்பதே என்னுடைய தாழ்மையான கருத்தாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் ஆறுவயதுச் சிறுமி பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் எமது செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையில் இந்த மண்ணிலே இடம்பெறும் அனைத்து அட்டுழியங்களுக்கும், பெண் ஆதிக்க வன்முறைகள் அனைத்திற்கும் ஆரம்பப் புள்ளி இந்தப் போதைப்பொருள், கஞ்சா என்பனவே ஆகும். இவற்றினை நிறுத்துவதன் ஊடாக எமக்கு நீதி கிடைப்பதன் மூலம் மாத்திரம் தான் இந்த மண்ணில் ஒரு வன்முறையற்ற கலாசாரத்தை உருவாக்க முடியும்.

எமது இனம் ஒரு காலத்திலே இப்படித்தான் வாழவேண்டுமென்ற ஒரு முன்னுதாரணத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால், இன்று ஒரு இனம் எப்படி வாழக்கூடாது என்பதை எடுத்துக் காட்டும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பது வேதனை தரும் விடயமாகும்.

யுத்தம் முடிவடைந்து தற்போது பத்து ஆண்டுகள் கடந்து விட்டது. இந்தப் பத்து ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் நாங்கள் கல்வியிலும், கலாசாரத்திலும், பண்பாட்டிலும் முன்னிலையிலிருந்தோம்.கல்வியிலும், கலாசாரத்திலும், பண்பாட்டிலும் எமது இனத்திற்கு உரித்தான அடையாளங்களைப் பேணிப் பாதுகாத்து வந்தோம்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னரிருந்த கல்வியையும், கலாசாரத்தையும் இன்று நாம் தொலைத்துவிட்டோம். தேடிக் கொண்டிருக்கின்றோம். இது எம்மைப் பொறுத்தவரை எமது இனத்தின் சாபமாகவே பார்க்கப்படுகின்றது.

கல்வியையும், கலாசாரத்தையும் இழந்த ஒரு இனம் இந்த மண்ணில் எதனையும் சாதிக்க முடியாது.

உண்மையில் காவல்துறை இந்த மண்ணில் எமது இனத்தைச் சிதைக்கும் வகையிலான செயல்களையே செய்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாகப் போதைவஸ்துக்களை ஊக்குவிப்பதன் மூலம் எமது கல்வி, கலாசாரம், பண்பாடு என்பவற்றை அழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது வேதனைக்குரிய விடயமாகும் எனவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.