தேர்தல் தலையீடு குறித்துப் பேசப்படும்- ட்ரம்ப்!

ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பின்போது அமெரிக்க தேர்தலில் தலையீடு குறித்து பேசுவேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடுகள் இருந்தன என்று கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சர்ச்சை எழுந்து வருகிறது. இதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் ரஷ்ய குறுக்கீடுகள் இருந்ததை உறுதி செய்ததது. ஆனால், விசாரணை ஆணையத்தின் விசாரணையை ட்ரம்ப் குறை கூறி வருகிறார். இந்தக் குற்றச்சாட்டை ரஷ்ய அரசும் மறுத்து வருகிறது.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினை ஃபின்லாந்து தலைநகர் எல்சின்கியில் ஜூலை 16ஆம் தேதி ட்ரம்ப் சந்தித்து பேசவுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பின் போது, ரஷ்யாவின் தலையீடு குறித்துப் பேசுவீர்களா? என்று நேற்று (ஜூன் 30) கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், அமெரிக்க தேர்தலின் தலையீடு குறித்து பேசுவோம் என்று கூறியுள்ளார். அமெரிக்க தேர்தலை யாரும் சீர்குலைப்பதை நாங்கள் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாகப் போரில் ஈடுபட்டுவருவது போன்ற ரஷ்யாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த நடவடிக்கை குறித்தும் அதிபர் புதினுடன் பேச இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி விதிப்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்த ட்ரம்ப் உலக வர்த்தக அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுகிறதா என்ற கேள்விக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்புகள் நல்ல விஷயங்களுக்கு வழிவகுக்கும் என்றும், பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.