திலீப் விவகாரம்: இறங்கிவந்த மோகன்லால்!

நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றமற்றவராகத் தீர்ப்பளிக்கப்படும் வரை ‘அம்மா’ அமைப்பில் நடிகர் திலீப் சேர்க்கப்பட மாட்டார் என அதன் தலைவர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளானார். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மலையாள நடிகர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டு, பின் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கேரளாவின் நடிகர் சங்கமான ‘அம்மா’வில் பொருளாளராக பதவி வகித்த திலீப் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
ஜூன் 24ஆம் தேதி ‘அம்மா’ அமைப்பின் பொதுக்குழு கூட்டம் கொச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திலீப்பை மீண்டும் அமைப்பில் இணைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்யா நம்பீசன், பார்வதி உள்ளிட்ட நடிகைகள் ‘வுமன் சினிமா கலெக்டிவ்’ என்ற இயக்கம் சார்பாக அறிக்கை வெளியிட்டனர். திலீப்பை மீண்டும் இணைப்பதைக் கண்டித்து அம்மா அமைப்பிலிருந்து விலகினர். தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சைகளை கிளப்பியது. அம்மா அமைப்பும் நடிகர் மோகன்லாலும் விமர்சிக்கப்பட்டனர். திலீப் தான் குற்றமற்றவராக நிரூபணமான பின்னரே அமைப்பிற்கு வருவதாக அறிக்கை வெளியிட்டார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக மோகன்லால் நேற்று (ஜூலை 9) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, “திலீப் வழக்கில் குற்றமற்றவராகத் தீர்ப்பளிக்கப்படும் வரை ‘அம்மா’ அமைப்பில் சேர்க்கப்பட மாட்டார். பொதுக்குழு கூட்டத்தில் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். ஆனால், வுமன் சினிமா கலெக்டிவ்வைச் சேர்ந்த நடிகைகள் யாரும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ‘அம்மா’ எப்போதும் நடிகைகளுக்கு ஆதரவாகவே செயல்படும். திலீப் இந்த வழக்கிலிருந்து குற்றமற்றவராக வெளியே வர வேண்டும் என்றே நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.