பெண் கல்வியும் பொருளாதார இழப்பும்!

பெண்களுக்குப் பள்ளிக் கல்வியை வழங்கத் தவறினால் சர்வதேச அளவில் 30 லட்சம் கோடி டாலர் வரையில் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று உலக வங்கி தனது ஆய்வறிக்கையில் எச்சரித்துள்ளது.
பொதுவாகவே பெண் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதில் பெற்றோர்கள் ஆண் குழந்தைகளுக்கு இணையான முக்கியத்துவம் தருவதில்லை. பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்னரே திருமணம் செய்து வைப்பதும் உண்டு. பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும் நிதி நெருக்கடி, பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளும் பெண் கல்விக்குத் தடையாக இருக்கின்றன. இவ்வாறு பெண்களுக்குப் பள்ளிக் கல்வியை வழங்காவிட்டால் சர்வதேச அளவில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை எச்சரிக்கிறது. உலகளவில் 13 கோடி சிறுமிகள் பள்ளி செல்லாமல் இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக வங்கியின் ’தவறிய வாய்ப்புகள்: பெண் கல்வி வழங்காவிட்டால் மாபெரும் செலவு’ என்ற தலைப்பினாலான இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில அம்சங்களைக் காணலாம்.
குறைவான வருவாய் கொண்ட நாடுகளில் உள்ள சிறுமிகளில் மூன்றில் இருவர் மட்டுமே அடிப்படைக் கல்வி பயிலுகின்றனர். இதில் மூன்றில் ஒருவர் மட்டுமே 8 முதல் 10ஆம் வகுப்பை நிறைவுசெய்கின்றனர். இரண்டாம் நிலைக் கல்வியை நிறைவுசெய்த பெண்கள் பள்ளி செல்லாத பெண்களை விட இருமடங்கு சம்பாதிக்கின்றனர். கல்வி பயிலுவதால் சிறு வயதிலேயே திருமணம், சிறு வயதிலேயே தாய்மையடைவது, குழந்தை இறப்பு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற இன்னல்களிலிருந்து அவர்கள் காக்கப்படுகின்றனர். கருவுறுதல் விகிதம் குறைந்து மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. பெண்கள் கல்வி பயிலுவதால் குடும்பத்தில் அவர்களின் முடிவு மேற்கொள்ளும் திறன் மேம்படுகிறது. அடிப்படைச் சேவைகள் குறித்த விழிப்புணர்வும், பிறப்பு விகிதத்தைப் பதிவு செய்யும் விழிப்புணர்வும் அவர்களுக்கு ஏற்படுகிறது. பெண்களின் பள்ளிக் கல்வி தொடராமல் பாதிப்பு ஏற்படும் போது உலகளவில் உற்பத்தி குறைந்து, பொருளாதார இழப்பும் ஏற்படும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.