சென்னை வாசிகளை ஈர்க்கும் கொழும்பு!

இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் சென்னையிலிருந்து துபாய் மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களுக்குத்தான் அதிகளவில் சர்வதேச விமானப் பயணங்களை இந்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.



இதுகுறித்து சிவில் பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் சென்னையிலிருந்து சர்வதேச விமானப் பயணங்கள் மேற்கொண்டவர்கள் அதிகளவில் கொழும்பு, துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய விமான நிலையங்களுக்குத்தான் சென்றுள்ளனர். நான்காவது இடத்தில் சார்ஜாவும், ஐந்தாவது இடத்தில் கோலாலம்பூரும் உள்ளன. இதில் கொழும்புவிற்கு 1,25,656 பேரும், துபாய்க்கு 1,22,488 பேரும், சிங்கப்பூருக்கு 1,10,968 பேரும், சார்ஜாவுக்கு 77,105 பேரும், கோலாலம்பூருக்கு 49,736 பேரும் பயணித்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாகும்.

சென்னையிலிருந்து சில பகுதிகளுக்கு நேரடி விமானங்கள் இல்லாததால், கொழும்புவிற்குச் சென்று அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு மாற்று விமானத்தின் மூலம் பயணிப்பதே கொழும்பு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குக் காரணமாகும். அதேபோல சென்னையிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குப் படிக்கவும், அவர்களது உறவினர்களும் அதிகளவில் செல்வதால் இந்த நாடுகளுக்கு அதிகளவில் விமானங்கள் தேவைப்படுகின்றன’ என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், சென்னை விமானப் பயணிகள் பயணித்த இடங்களைப் பொறுத்தவரை, துபாய், கொழும்பு, சிங்கப்பூர், பேங்காக் மற்றும் மஸ்கட் ஆகிய விமான நிலையங்கள் முதல் ஐந்து இடங்களில் இருந்தன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.