என் காதலன் மாவீரன் என்பதில் எனக்கும் பெருமையே..!

இத்தோடு நான்காவது தடவையாக எனது கால்களிற்கு சத்திரசிகிச்சை நடைபெறவுள்ளது.இதுவரையும் நான்அழுததே இல்லை.ஆனாலும் இன்றைய தினம் என்மனம் அதிக வேதனைப்பட்டபடி ஓர்இனம்புரியாத வேதனையில் துடித்தபடி இருந்தது.
என்கண்களில் இருந்து வடிந்த கண்ணீரை எனது சித்தியின் மகள் அபிரா கண்டுகொண்டாள்."அக்கா".....ஏன் அழுகிறீர்கள்.கால் வலிக்குதாக்கா என்றவாறு என் அருகில் வந்து என் கண்ணீரை அன்போடு துடைத்துவிட்டாள்.
எப்படி சொல்வது அவளிற்கு என் மனநிலையை,என் கால்கள் வலிக்கவில்லை என்மனம்தான் வலியால் துடிக்கின்றது என்று......
என் வாழ்க்கையில் சில கடந்தகால நிகழ்வுகளை மறக்கமுடியவில்லையே,துன்பங்களை மறந்துவாழ முடியாமல் இருக்கிறதே. என்ன செய்வது.என்கடந்தகால வாழ்க்கையை நினைத்துப்பார்க்கிறேன்,சில நினைவுகள் இனிமையாக உள்ளது,சில நினைவுகள் கசப்பாக உள்ளது,சிலநிகழ்வுகள் இருள்சூழ்ந்து உள்ளது.
அந்த இருள்நிறைந்த நினைவுகளிற்காகவே கண்ணீர் சிந்துகிறேன் தங்கையே என்று அவளிடம்கூறி பெரிதாக அழவேண்டும்போல் இருந்தாலும் என்மனதை திடப்படுத்திக்கொண்டேன்.
நான் ஓர் விடுதலைப்புலி போராளி.அன்று நான் போராளியாக இருந்த காலப்பகுதியில் வெளிவேலைகளே எனக்கு வழங்கப்பட்டது,நான் வேலையாக சென்றுவருமிடத்திற்கு வரும் போராளிதான் கவிமாறன், அமைதியான சுபாவம் உடையவன்,பெரிதாக யாருடனும் கதைக்கமாட்டான்,தான்உண்டு தன்பணி உண்டு என்றுமட்டும் இருந்துவிடுவான்,ஆனால் நான் இதற்கு விதிவிலக்காக இருந்தேன்,எல்லோருடனும் நன்றாக கதைப்பேன்,ஏனையோருடன் கதைப்பதபோல் கவிமாறனுடன் நான் கதைத்ததும் இல்லை,ஏனோ எனக்கு அப்போது கதைக்கவும் தோன்றியதில்லை,
ஓரு நாள் நான் அவசரமாக முகமாலை போகவேண்டி இருந்தது.ஆனால் எனக்கு போககூடிய சூழல் இருக்கவில்லை.என் பைல் வேலைகளை நான் முடித்து ஒப்படைத்தால் மாத்திரமே செல்லமுடியம் என்ற நிலையில் இருந்தேன்,அப்போதுதான் கவிமாறன் என் அவசரத்தை புரிந்துகொண்டு எனக்கு உதவிபுரிந்தான்,
அன்றில் இருந்து கவிமாறன் என்னுடன் சில நேரங்களில் கதைப்பதுண்டு,சில மாதங்கள் கடந்தது,ஓர்நாள் என்வேலையாக போனபோது அங்குவந்த கவி "கனிவிழி" என்று என்னை முதன்முதலாக பெயர் சொல்லி அழைப்பது கேட்டது.என்ன ஆச்சரியம் இன்று மழைதான் என்று மனதிற்குள் நினைத்துவிட்டு என்ன என்று கேட்டேன்,அப்போது எனக்கு ஒரு பார்சல் தந்தான்.
என்ன பார்சல் இது என்ன விசேடம் என்று கேட்டேன்,முதல்நாள் தனது அம்மா சகோதரிகள் தன்னை பார்க்க வந்ததாகவும் தனது பிறந்தநாளும் என்று கூறியிருந்தான்,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்கூறி பார்சலை பெற்றுக்கொண்டேன்,ஆனாலும் அந்த பார்சல்விடயம் என் மனதை உறுத்தியபடி இருந்தது,ஏன் மற்ற தோழிகளிற்கு கொடுக்காமல் எனக்கு தந்தான் என்று.பல நேரங்களில் அவனது செயற்பாடுகள் எனக்கு ஏதோ கூறமுயல்வதுபோல் இருந்ததுண்டு.
ஒரு வருடம் ஓடி மறைந்துவிட்டது,இராணுவமும் முன்னேறி வந்தகொண்டிருந்தான்,எல்லோரும் களமுனைக்கு செல்லவேண்டிய சூழலில் இருந்தோம்.
ஆம் நான் களமுனைக்கு சென்றுவிட்டேன் என்தோழிகளுடன் களத்தினில் நிற்பதற்கு.பின்வேலைகள் செய்வதைவிட களமுனையில் நிற்பதுகூட ஒருசுகமாகவே பட்டது,இராணுவத்தின் முன்னேறும் தாக்குதலை முறியடிப்பதில் முனைப்பாக எதிர்தாக்குதலில் நின்றபோதுதான் இராணுவம் ஏவியசெல் ஒன்று எமக்கு அருகில்வீழ்ந்து வெடித்தது.அதில் எனது இருதோழிகள் வீரச்சாவை தழுவ நான் படு காயமடைந்து மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டேன்,
நான் காயப்பட்டதை கேள்விப்பட்ட கவி என்னைபார்க்க ஓடிவந்தான்.எனக்கு சில பழங்கள் வாங்கிவந்திருந்தான்,அவன் மனவேதனையில் இருப்பது புரிந்தது,அன்றில் இருந்து என்னை அடிக்கடி வந்து பார்த்துவிட்டுச்செல்வான்,ஆனால் அவன் கதைத்த கதைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்,
ஒரு மாதத்தின்பின் நான் படையணிக்கு சென்றுவிட்டேன்,பல இடம்பெயர்வுகள்.பல களமுனைகள் என்று சுழன்றுகொண்டிருந்தோம்,அப்படியான சூழலில்கூட கவி என்னை சிலவேளை தேடிவந்து பார்த்துவிட்டுபோனான்,வோக்கி எடுத்து ஓர் இரு வார்த்தை கதைப்பான்,
பலஇடங்களின் இடம்பெயர்வுக்கு பின் இறுதியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் நான் இருந்தபோது செல்மழைக்குள்ளும் என்னைத்தேடி வந்தான்,என் தோழிகள் அவனுடன் கதைத்தார்கள்.
என்னுடன் கதைக்க வேண்டும் என்று கேட்டவன்.என்னை தான் விரும்புவதாகவும் ஒருவருடத்திற்கு முன்பே தான் தனது பொறுப்பாளரிடம் என்னைப்பற்றி கூறிவிட்டதாகவும்.என் முடிவை மட்டும் கூறும்படியும் என் பதிலோடு தான்மனம்நிறைவாக களமுனைக்கு போகப்போவதாகவும் கூறினான்,
அன்றைய சூழலில் என் முடிவு எப்படி இருந்திருக்கும் என்று கூறவேண்டியதில்லை.நான் மறுத்துவிட்டேன்.என்தாய் மண் என் மாவீரர்கள் கனவு வீண்போகக்கூடாது.முதலில் களத்தில் நிற்போம் உயிர் மீண்டால் மிகுதியைபார்ப்போம். அத்தோடு என்னால் இந்த சூழலில் இப்படியான கதையும் கதைக்க முடியாதென்று மறுத்துவிட்டேன்,என் இறுதி முடிவுக்காக காத்திருந்துவிட்டு போய்விட்டான்,
இராணுவம் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றியபோது பலபோராளிகளோடு சரணடைந்து நானும் புணர்வாழ்வு சென்றுவிட்டேன்,
சரணடைந்து வந்திருந்தாலும் கவியை நான் கூட்டிவராமல் இராணுவத்திடம் விட்டுவந்துவிட்டேனே என்று என்மனம்தினம் அழுதது,புணர்வாழ்விற்கு வந்தபின் ஆண்போராளிகள் இருக்கும் முகாம்களிற்கு கவியின் பெயரோடு படையணி பெயருடனும் கடிதம் அனுப்பினேன்,பல கடிதங்கள் எழுதியும் எனக்கு பதில்கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டபடி இருந்தபோதுதான் கவியின் நண்பன் இளச்சுடர் எனக்கு பதில் கடிதம் வரைந்திருந்தான்.
என் கவி வட்டுவாகல் பகுதியில் இராணுவத்துடனான சண்டையில் காயமடைந்து பின்னுக்கு வந்திருந்ததாகவும் ஒருநாள் பங்கருக்குள் வெட்கையாக உள்ளதென்று வெளியில் படுத்திருந்ததாகவும்,இராணுவத்தின் எறிகணைவந்து விழுந்ததில் இறந்துவிட்டதாகவும் தான்தான் பங்கருக்குள் அவன் உடலைபோட்டு மூடிவிட்டு வந்ததாகவும் என்னைபற்றி தனக்கு கவி ஏற்கனவே கூறியிருந்ததாகவும் எழுதியிருந்தான்,
நான் நேசித்த மண்,என் மாவீரர்கள்,என்சக தோழர்,தோழிகள், என்கவி எல்லோரையும் இழந்துவிட்டேன்.கவியை பற்றி எனக்கு வேறெதுவும் தெரியாது,அவன் பெற்றோரைகூட சந்தித்து கவிமாறன் வீரச்சாவடைந்துவிட்டான் என்றுகூறகூட முடியவில்லை.அவனின் பிறந்தநாள் நாளை என்பது மட்டமே தெரியும்.ஆம் என் கண்களின் கண்ணீருக்கு சொந்தமானவனின் பிறந்தநாள் நாளை,
யாவும் கற்பனையே.
-பிரபாஅன்பு-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.