முல்லைத்தீவில் விகாரை அமைக்க -தொல்பொருள் திணைக்களம் அனுமதி!

நல்லிணக்கம் நல்லாட்சி என்று சொல்லிய அரசிடம் எங்கள் மக்கள் கேட்பது உங்கள் உரிமைகளையும் சொத்துக்களையும் அல்ல. நாங்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை விட்டுத்தாருங்கள் என்றும, கடலில் இயல்பாக தொழில் செய்து அன்றாட வாழ்விற்கு வழிவிடுங்கள் என்று தான் கேட்கின்றார்கள்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்தார்.
தேசிய வீடமைப்புஅதிகார சபையினால் அதன் அமைச்சர் சஜித் பிரேமதாசா தலமையில் முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற மாதிரி வீட்டுத்திட்ட கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்ததாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிப்பதற்கு பல சூழ்ச்சி வேலைத்திட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் 60 அடி விகாரை அமைப்பதற்கும் விடுதி அமைப்பதற்கும் தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் சகல மாவட்டங்களிலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீடுகள் கட்டப்பட்டு நிறைவேற்றி கொடுக்கப்பட்டு கையளிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டம் போரின் போது பல்வேறு கோரத்தை சந்தித்த மாவட்டம் இறுதி போரின் போது இன்னல்களை எதிர்கொண்ட மாவட்டம் பன்னாட்டுப் புகழ்பெற்ற முள்ளிவாய்க்கால் கிராமம் அமைந்துள்ள மாவட்டம் அமைச்சர் அவர்களே நீங்கள் அமர்ந்துள்ள வலது பக்கமாக கடல் தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்கு இடம்பெறும் அநீதிகளை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
மாவட்டத்தின் இடது பக்கமாக இன்று ஒரு ஆண்டுக்கு மேலாக கேப்பாபுலவு மக்கள் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க போராடிக்கொண்டிருக்கின்றார்கள். கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி என்று தமிழர்களின் பூர்வீக காணிகள் மகாவலி எல் வலயத்தில் அபகரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தகமானிகள் தமிழர்களின் பூர்வீக காணிகள் தொல் பொருளியல் திணைக்களத்தால் கையகப்படுத்துவதற்கு பல சூழ்சிகள் நடைபெற்றது மட்டுமல்ல, அண்மையில் 60 அடி உயரமான விகாரை ஓய்வு மண்டபங்கள் கட்டு வதற்கு சம்மந்தப்பட்ட அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோத்தபாய கடற்படை முகாம் வட்டுவாகல் பாலத்தை அண்டிய தமிழ்மக்களின் ஆயிரக்கணக்கான காணிகள் படையினரால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நீங்கள் ஒரு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் இந்த செய்திகளை உங்கள் சக அமைச்சர்களுக்கு நீங்கள் கொண்டுசெல்லவேண்டும் உங்கள் சேவைகளை நாங்கள் பாராட்டுகின்ற அதே வேளையில் எங்கள் மக்களை நோக்கி நீங்கள் வருகின்றபோது மக்கள் சார்பாக எதிர்கொள்கின்ற பிரச்சனைகளை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இங்கு இருக்கின்ற மக்கள் போரின் வலியினை சுமந்தவர்கள் இறுதி போரின் வலியினை நானும் சுமந்து கொண்டிருப்பவள் என்ற உரிமையில் மக்களின் குரலாக நான் உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன்.
அத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கைகளால் எங்கள் அரச அதிகாரிகள் கையேறு நிலையில் கதிரையில் வெறும் பொம்மைகளாக இருப்பது போல் எங்களுக்கு தோன்றுகின்றது. அவர்களை மிஞ்சிய சுற்று நிருபங்கள் சுற்று நிருபங்களை மிஞ்சிய செயற்பாடுகள் இந்த மாவட்டத்தை மேலும் மழுங்கடிக்கச் செய்கின்றது.
இந்த மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அடாவடித்தனமான வேலைகளை உங்கள் சக அமைச்சர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நாங்கள் அரசிற்கு எதிரானவர்கள் அல்ல. இந்தப் போராட்டங்கள் தெற்கில் கூட்டு எதிர்அணி செய்வது போல அரசை வீழ்த்துவதற்கான போராட்டம் அல்ல மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சுமூகமாக வாழ்வதற்கான மக்களின் போராட்டம் தான்.
இந்த அரசானது இந்த நிலமையினை விளங்கிக்கொண்டு எமது மக்கள் சுயமாக சுதந்திரமாக வாழ்வதற்குரிய சுமூகமானசூழலை ஏற்படுத்தி தருவதற்கு நீங்கள் அரசிற்கு குரல் கொடுக்கவேண்டும் என்று மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன் . என்றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.