யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் குறைந்து விட்டதாம்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள, வடமாகாண பிரதிப் பொலிஸ்மா
அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, அதிக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறும் பிரதேசங்களின் தகவல்களை, இரகசியமான முறையில், தொலைபேசி மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக தெரிவிக்குமாறு, பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - தலைமைப் பொலிஸ் நிலையத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்கள் மற்றும் ஆவா குழுவினரைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நேற்று யாழ்ப்பாணம், கோப்பாய் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில், பொலிஸாரின் அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர், வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவ்வாறு செயற்பட்டால், வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் தெரிவித்தார்.

அதேநேரம், மானிப்பாய் மற்றும் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துண்டுப்பிரசுரம், விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, குறிப்பிட்ட பொலிஸ் நிலையப் பகுதிகளில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள், மற்றும் ஆவா குழுவினரைக் கட்டுப்படுத்த, தகவல் அறிந்த பொத மக்கள் தொலைபேசி மூலமும், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் முகவரிக்கும் தனிப்பட்ட முறையிலும், இரகசியமாக தகவல்களை வழங்கினால், வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த இலகுவாக இருக்குமென்று, அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.