கொள்ளிடம் பாலம்:அதிமுக விளக்கம்!

திருச்சி கொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்க கோரியிருந்த திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

இன்று(ஆகஸ்ட் 18) காலை ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், போக்குவரத்தை மட்டும் தடை செய்துவிட்டு அதிமுக அரசு அமைதி காப்பது கண்டனத்திற்குரியது, மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ராணுவ உதவியுடன் உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு அதிமுக, தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழைய இரும்பு பாலம் காலாவதியாகி பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல என்று ஒதுக்கப்பட்டு, அம்மாவின் ஆட்சியில் புதிய கொள்ளிடம் ஆற்று பாலம் கட்டப்பட்டு, 2015ஆம் ஆண்டு முதல் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டு, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன” என விளக்கம் அளித்துள்ளது.

மேலும் “உண்மைகளை மறைத்து இட்டுக்கட்டிய பொய்யை உரக்கச் சொல்லி மக்களுக்கு பயத்தை உண்டாக்கி, கழக ஆட்சிக்கு அவ பெயர் தேடித்தர முனைந்த எதிர்க்கட்சித் தலைவரின் விஷம் கலந்த பேச்சு கண்டனத்துக்குரியது” என பதிவிடப்பட்டுள்ளது.

இன்று மாலை நாகை மாவட்ட கொள்ளிடம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஓ.எஸ். மணியன், வெள்ளப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை கரைக்கு வரும்படி கோரிக்கைவிடுத்துள்ளார்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.