தகுதி நீக்க வழக்கு: தீர்ப்புக்கு பிறகு ஆட்சி கவிழும்!

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவிழக் கூடிய வாய்ப்புள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் முன்பு விசாரணையில் இருந்துவருகிறது. எம்எல்ஏக்கள் தரப்பு வாதமும், முதல்வர், சபாநாயகர் மற்றும் கொறடா தரப்பு வாதங்களும் கடந்த 14ஆம் தேதியோடு முடிவடைந்தன. தற்போது எம்எல்ஏக்கள் தரப்பில் பதில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 19) செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “18 எம்எல்ஏக்கள் வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்தாலும், செல்லாது என்று வந்தாலும், இரு வகையிலும் அரசுக்கு பெரும்பான்மை இல்லாமல் போகக்கூடிய வாய்ப்புகள்தான் உள்ளது. அதனால் தற்போதிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தீர்ப்புக்கு பிறகு கவிழக் கூடிய வாய்ப்புள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனுடன் சேர்த்தே சட்டமன்றத் தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
“காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் சென்று சேரவில்லை. இதனால் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்டத்தினுடைய ஆட்சித் தலைவர்களும், பொறியாளர்களும் நடவடிக்கை எடுத்து இன்னும் சில நாட்களில் தண்ணீர் கடைமடை பகுதியை அடையை வழிசெய்ய வேண்டும். தண்ணீர் சென்று சேரவில்லை என்றால் பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்றும் திருநாவுக்கரசர் எச்சரித்தார்.
“பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தமிழக காங்கிரஸின் சார்பில் முதற்கட்டமாக 10 லட்சம் நிதி வழங்கியுள்ளோம்” என்று குறிப்பிட்ட திருநாவுக்கரசர், திமுகவுடன் கூட்டணியில் தொடர்கிறோம் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.