இன்று வைகுண்ட ஏகாதசி!

முக்தி தரும் வைகுண்ட ஏகாதசி!

தாயை விட சிறந்த கோவில் இல்லை!
கங்கையை விட உயர்ந்த தீர்த்தம் இல்லை!
காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை!
ஏகாதசியை விட உயர்ந்த விரதம் இல்லை!

ஏகாதசி விரதத்துக்கு மிகுந்த சிறப்பும் மகிமையும் உண்டு. ஆண்டுக்கு மொத்தம் 25 ஏகாதசி தினங்கள் வரும்.

இதில் தனிச் சிறப்புக் கொண்டது வைகுண்ட ஏகாதசி. இந்த ஏகாதசி முக்தி தரும் ஆற்றல் கொண்டது. சாப விமோசனத்தையும் தேடித்தரும்.

இத்தகைய நன்மை தரும் வைகுண்ட ஏகாதசி (8-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் வைணவத் தலங்களில் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வு சொர்க்கவாசல் திறப்பாகும்.

சொர்க்க வாசல் திறக்கப்படும்போது அதன் வழியாக பெருமாள் எழுந்தருள்வார். அப்போது திருமாலை தரிசிப்பவர்களுக்கும், அதன் வழியாக வருபவர்களுக்கும் பிறவிப் பிணியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

அதாவது சொர்க்க வாசல் வழியாக நாளை செல்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். சொர்க்க வாசல் வழியாக செல்வது என்பது பகவானின் இருப்பிடமான பரமபதத்துக்கு சென்று திரும்பி வருவதற்கு நிகரான புண்ணியத்தை தருவதாகும்.

எனவேதான் சொர்க்க வாசல் வழியாக செல்லும்போது பெருமாளின் நாமத்தை சொல்லியபடியும் கோவிந்தா கோஷம் எழுப்பியபடியும் செல்ல வேண்டும். சொர்க்கவாசலை கடக்கும்போது இதை மறக்காதீர்கள். உணர்வுப் பூர்வமாக நீங்கள் பரமபத வாசலை கடந்தால், உண்மையிலேயே ஆத்ம பலம் தேடி வரும்.