கிழக்கில் தமிழ்ப்பிரதேசங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன!- கலையரசன் சீற்றம்!

என்னதான் ஜக்கியம் பேசினாலும் நல்லாட்சி நிலவினாலும் கிழக்கில்
தமிழ்ப்பிரதேசங்கள் தொடர்ந்து மத்தியஅரசினாலும் மாகாணஅரசினாலும்
புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கிழக்குமாகாணசபை உறுப்பினர் தவராசா
கலையரசன் கவலையோடு குற்றம்சுமத்தினார்.

இவ்வாரம் அம்பாறை மாவட்டத்தில் இருநாள் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட
த.அ.கட்சி தலைவர் மாவைசேனாதிராஜாவுடன் பயணித்து கட்சிப்பிரமுகர்கள் தொண்டர்கள்
அபிமானிகள் மத்தியில் உரையாற்றும்போது அவர் மெற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
நான்பிரதிநிதித்துவப்படுத்தும் நாவிதன்வெளிப்பிரதேசத்தில் 70வீதம்
தமிழ்மக்களும் 30வீதம் முஸ்லிம் மக்களும் வாழ்ந்துவருகின்றனர். ஆனால் அங்கு
மத்திய அரசினாலும் மாகாணஅரசினாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி
செயற்பாடுகள் யாவும் தலைகீழாக உள்ளன.

அதாவது 30வீதமாகவுள்ள முஸ்லிம்மக்களுக்கு 70வீத அபிவிருத்தியும்
70வீதமாகவுள்ள தமிழ்மக்களுக்கு 30வீத அபிவிருத்தியுமே வழங்கப்படுகின்றது.

அண்மையில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையினால் மேற்கொள்ளப்பட்ட
வேலைத்திட்டங்கள் எமது பகுதியில் மேற்சொன்ன விகிதத்தில் வழங்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமல்ல உள்ளுராட்சி நிறுவன்களுக்கான நிதிஒதுக்கீட்டிலும் பாரபட்சம்
நிலவுகின்றது. அதாவது தமிழ்ப்பிரதேசங்கள் தொடர்ந்து
ஒதுக்கப்பட்டுக்கொண்டுவருகின்றன.

ஆனால் எமது தலைவர்கள் கைகோர்த்து விட்டுக்கொடுத்து பழகுகின்றனர். ஆனால்
அவர்கள் ஒற்றுமை போன்று கதைத்துவிட்டு அவர்கள் விடயத்தில்
கவனமாகஇருக்கின்றனர்.அபிவிருத்திகளையும் வேலைவாய்ப்புகளையும் முற்றாக
அனுபவிக்கின்றனர். நான் சொல்வது இனவாதமல்ல. உண்மை. அவர்கள் சொன்னால் நியாயம்
நாம் சொன்னால் இனவாதமா?

கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக விவகாரத்தில் ஒருசிலமுஸ்லிம் அரசியல்வாதிகள்
எப்படி நடந்துகொள்கின்றார்கள் என்பது சகலரும் அறிந்ததே. அதற்குள் நகர
அபிவிருத்தித்திட்டம் பற்றிப்பேசுகின்றார்கள். கல்முனைக்குள் இருக்கின்ற
தமிழ்மக்களின் பிரதிநிதிகளிடம் எதுவுமே சொல்லாமல் ரகசியமாக இத்திட்டம்
முன்னெடுக்க திட்டமிடப்படுவது ஏன்?

கல்முனை மத்தி வலயம் தொடர்பில் மத்தியஅரசுக்கு விடயம் சென்றுள்ளது.அங்கு சில
முஸ்லிம் அமைச்சர்கள் எதிர்ப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அன்று மட்டு.மத்தி வலயம் உருவாகும்போது எந்தவொரு தமிழ்பிரதிநிதியாவது அதற்கு
எதிர்ப்புத் தெரிவித்தார்களா? இல்லை. சரி இப்போது முன்னெடுத்துள்ள பொத்துவில்
வலயத்திற்குத்தானும் எதிர்ப்புத் தெரிவித்தார்களா ? இல்லை.
நிலைமை அப்படியிருக்க கல்முனைக்கு மத்திவலயம் வரும்போது மட்டும் ஏனிந்த
எதிர்ப்பு? இது நியாயமா? இது நரித்தந்திரம்.இதனை அரசுடன் கைகோர்த்துள்ள
எம்தலைவர்கள் கவனிக்கவேண்டும்.

சமாதானம் விட்டுக்கொடுப்பு என்பது இருதரப்பிலும் இருக்கவேண்டும்.
இந்நிலைநீடித்தால் அம்பாறை தமிழர்களைக்காப்பாற்றமுடியாது போய்விடும்.கட்சியின்
நிலையும் கேள்விக்குறியாகும். என்றார்.