ஒரு கொலையும் ஒரு தற்கொலையும் வேண்டாம் என்று தான் நாம் பிரிந்தோம்!

நாமிருவரும் நீங்கியது
ஒரு மையத்திலிருந்து என்றாலும்
பயணித்தது வெவ்வேறு திசைகளில் !
குன்றின் மேல் நோக்கிய பாதையில் நான் !
கீழ் நோக்கிய வழியில் நீ!

என் எந்த திக்கிலும் நீ இல்லை!
உன் எல்லா திசைகளிலும்
நான் தான் இருந்தேன்!
என்னை வீழ்த்த காத்திருந்ததில்
உன் பயணத்தையே நீ மறந்து கொண்டாய்!

என்னை பள்ளத்தில் வீழ்த்த முயன்றதில்
நீ வெட்டிய குழியில் நீயே விழுந்து
கொண்டாய்!
நான் திரும்பியும் பாராமல்
சென்ற போது என் மானத்தைப்
பறிக்க முயன்றாய்!

என் சிம்மாசனத்தை நான்
அடைந்ததும் உன் கிரீடம் பறிக்கப்பட்டது!
உன் முகமிருக்கும் இடத்திற்கு
என் கால்கள் வந்த போது நீ
கொஞ்சம் கொஞ்சமாய்
பைத்தியக்காரனாய் மாறிக் கொண்டிருந்தாய் !

நான் மேலே மேலே சென்று
மேகங்களை அடைந்தது
மழையை வழங்கிய போது
நீ தொழுநோயாளியாகி தெருவில் கிடந்தாய்!

உன் தாகத்திற்கு என் மாரியை
பருகினாய்!
பத்தினிகள் இல்லாத ஊரில்
எப்படி கார் பொழிகிறது
என்று முணுமுணுத்தபடி!