தீயில் எத்தனை உயிர்கள் காவு போயின ?

அனல் கக்கிய கனல்
தீயில் எத்தனை
உயிர்கள் காவு போயின ?
தசாப்த்தங்கள் சகாப்தங்களாகி
கடந்து போயின!

நீங்கியதா
தமிழர்களின் சாபங்கள்?
பேச வந்த தலைவர்களும்
பேசிச் சென்ற தலைவர்களானார்களே….
பேச்சு வார்த்தைக்கு
முடிவு தான் கிடைத்ததா?

பத்து சதுர அடிக்குள்
பட்டினி கிடக்கின்றனரே…..
பார்த்துக் கொள்வதற்கு
எவர் தான் உள்ளனர்?
ஆறும் அறுபதும்
அநாதரவாய் நிற்கிறதே…..
ஆதரவளிக்க எவரேனும் உள்ளனரா?

வீரம் விளையாடிய மண்ணினில்
வல்லூறுகள் வட்டமிடுகின்றதே….
காத்துகொள்ளவும்
கடிவாளம் இடவும்
காவலர்கள் யாரேனும் இருக்கின்றனரா?

நிம்மதி என்பதை மறந்து
நிலைதடுமாறிய நிலையில்
வாழ்க்கை சரிதம் வாசிக்கின்றரே…..மீள்
வாழ்வளிப்போர் யார் தான் ?

சீரழிந்து போன மனங்களும்
கற்சிலையாய் போன சனங்களும் தானே
மிச்சமாகின
இந்த அகதி வாழ்வில்…..

தோழி கவிதாயினி