நாங்கள் ஏன் இந்தியர்களாக இருக்க வேண்டும்?’பொங்கல் கொதிப்பில் -சீமான்[காணொளி இணைப்பு]!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மக்கள் வீதிகளில் திரள்கிறார்கள். ‘ பொங்கலுக்கு

ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம்’ என பொதுமக்கள் கொந்தளிக்கும் சூழலில், கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். ‘ ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசைதிருப்பவே இப்படியொரு சிறப்பு நினைவூட்டலைச் செய்திருக்கிறது மத்திய அரசு” எனக் கொந்தளிக்கிறார் சீமான்.

” தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்காதது நல்லதுதான். அப்போதுதான் நாம் எந்தளவுக்கு வஞ்சிக்கப்பட்டு வருகிறோம் என்பதை மானமுள்ள தமிழர்கள் உணர்வார்கள். பொங்கலை விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கியதைப் போல, இந்தியப் பட்டியலில் இருந்தும் எங்களை நீக்கிவிடுங்கள் பிரதமரே…

எங்களுக்கான காலத்தை நீங்கள்தான் பிரசவிக்க வைக்கிறீர்கள். தமிழனைப் போல் இந்திய தேசியவாதியாக இருந்தவர்கள் வேறு யாருமில்லை. முகமது அலி ஜின்னா தனி நாடு கேட்டபோது, அவருக்கு இருந்த நியாயங்களைவிட ஆயிரம் காரணங்கள் தமிழனுக்கும் இருந்தன. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் நாடு போகப் போகிறது என்று காமராஜருக்கும் பசும்பொன் தேவருக்கும் தெரியவில்லையா? நம்முடைய மொழி, பண்பாடு, வாழ்வியல் கலாசாரம் உள்ளிட்டவை மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆனாலும், அதை எல்லாம் மறந்துவிட்டு இந்தியன் என்ற உணர்வோடு கரைந்து நின்றோம்.

அப்படி இருந்த மக்களை, தொடர்ந்து வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்?” எனக் கொந்தளிப்போடு பேசத் தொடங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தொடர்ந்து நம்மிடம் பேசினார்.

” நமது சகோதர மாநிலங்களுக்கு மதிப்பளித்து ஓணத்துக்கும் உகாதிக்கும் விடுமுறை அளிக்கிறோம். குருநானக்கிற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? மகாவீர் ஜெயந்திக்கும் விடுமுறை அளிக்கிறோம். தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்றவை திணிக்கப்பட்ட பண்டிகைகள். உழவர் பெருநாள் என்பது தமிழனின் வாழ்வோடு இணைந்த பண்டிகை. அதைக் கொண்டாடுவதற்கு எனக்கு விடுமுறை கிடையாது என்றால், பல்வேறு மொழிவழி மக்கள் வாழ்கின்ற நாடா இது?

இது தேசங்களின் ஒன்றியம்தானா என்ற கேள்விகள் எழுகின்றன. கூட்டாட்சித் தத்துவத்தை ஏற்றுக் கொண்ட மோடி, ஒற்றை ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். இது எவ்வளவு பெரிய ஆபத்தில் நிற்கப் போகிறது என்று அவர்கள் உணரவில்லை. ஒவ்வொரு மொழிவழி தேசிய இனத்துக்கும் பண்பாடு, கலாசாரம் எனப் பல அடையாளங்கள் இருக்கின்றன. அவற்றைக் கட்டிக் காப்பதற்காகத்தான் மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.

அம்மா மீது பற்று இருந்தால்தான், அடுத்த அம்மா மீதும் பற்று வரும். அதைவிட்டுவிட்டு, நீ தமிழனாகவே இருக்கக் கூடாது என்றால், நான் ஏன் இந்தியனாக இருக்க வேண்டும்? வீட்டையே நேசிக்கக் கூடாது என்றால், நாட்டை மட்டும் நான் ஏன் நேசிக்க வேண்டும்? இப்படியொரு நெருக்கடி நிலைக்குத்தான் நம்மைத் தள்ளுகிறார் மோடி. இந்திய தேசியப் பற்றாளர்களாக இருப்பவர்களை, தமிழ்த் தேசியவாதியாக மாற்றுவது இவர்கள்தான்.

‘ கச்சத் தீவு ஒருபோதும் இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்ததில்லை’ என பா.ஜ.கவும் சொல்கிறது. காங்கிரஸ் கட்சியும் சொல்கிறது. ஒருபோதும் பாத்தியப்படாத ஒன்றை, ஏன் விட்டுக் கொடுத்தீர்கள்? யாருக்கும் சொந்தமில்லாமல் எப்படி ஒரு தீவு இருக்க முடியும்? என் பாட்டன் சேதுபதி மன்னனுக்குச் சொந்தமாக கச்சத் தீவு இருந்தது. என்னிடம் இருந்து பிரித்த பாரம்பரிய சொத்தைக் கேட்டால், பிரிவினைவாதி என்கிறீர்கள். என் சொத்தை திருடிக் கொடுத்த நீங்கள் மட்டும் தேசப் பற்றாளர்களா? இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.

காவிரி மேலாண்மை வாரியத்தில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்றுதான். ‘ ஜெய்ராம் ரமேஷ் காலத்தில்தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது’ என ஜெயந்தி நடராஜன் சொல்கிறார். அப்போது காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்தது தி.மு.க. ‘ இன்றைக்கு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்’ என தி.மு.கவும் போராடுகிறது.

காங்கிரஸும் போராடுகிறது. கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது காங்கிரஸ். அன்றைக்கு தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது தி.மு.க. ‘இப்போது கச்சத் தீவை மீட்போம்’ என தி.மு.க சொல்கிறது. ‘வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே பொங்கலை பொதுவிடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார்கள். 15 ஆண்டுகள் ஆகிவிட்டன’ என்கிறார்கள்.

அன்றைக்கு ஆட்சியில் பங்கேற்று இருந்தது தி.மு.கவும் ம.தி.மு.கவும்தான். ஏற்கெனவே, நீக்கிவிட்டதை சிறப்பு நினைவூட்டல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? காரணம் மிக எளிதானது. முன்பைவிட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் அணி அணியாகத் திரள்கிறார்கள். ஆதரவுக் குரல் பெருகுகிறது. மத்திய அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.

தன்னெழுச்சியாக மாணவர்கள் கூடுகின்றனர். மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இதை திசைதிருப்புவதற்காகத்தான், ‘பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை இல்லை’ என அறிவிக்கிறார்கள். இது ஒரு புதிய பிரச்னையாக, தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது. ஜல்லிக்கட்டு போராட்டம் மடைமாற்றப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியபோது, கூடவே இருந்த தி.மு.க, இன்றைக்கு எதிர்க்கிறது. இதையெல்லாம், அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தின் பிள்ளைகள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பெயர்தான் தும்பை விட்டு வாலைப் பிடிப்பது என்பார்கள். ’15 ஆண்டுகளுக்கு முன்பே விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கலை நீக்கிவிட்டார்கள்’ என்கிறார் அன்புமணி. பத்தாண்டுகள் மன்மோகன் சிங்குக்கு பக்கத்திலேயே இருந்தீர்களே அன்புமணி..அப்போது என்ன செய்தீர்கள்? இன்றைக்கு மோடியைப் பார்த்துக் கடிதம் கொடுப்பதாகச் சொல்லும் நீங்கள், அன்றைக்கு ஏன் கேள்வி எழுப்பவில்லை?.

கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா என இந்திய நிலப்பரப்பில் பத்து கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். மலேசியா, சிங்கப்பூர் அரசுகள் பொங்கலுக்கு விடுமுறை அளிக்கின்றன. மூன்று லட்சம் பேர் வாழும் கனடா அரசு, தை மாதத்தையே தமிழர் மாதமாக அறிவிக்கிறது.

ஐரோப்பிய நாடுகள் எல்லாம் எங்களுக்கு விடுமுறை அளிக்கின்றன. சொந்த நாட்டிலேயே எங்களை ஊனப்படுத்துகிறீர்களே பிரதமரே…இது நியாயம்தானா? திரையரங்கில் தேசிய கீதம் பாடி மட்டும், தேசிய உணர்வை வளர்த்துவிட முடியாது.

கண் வழியாக போதை ஏற்றும் திரையரங்குகளில் தேசிய கீதம் பாடச் சொல்கிறீர்கள். வாய்வழியாக போதை ஏற்றும் சாராயக் கடைகளில் தேசிய கீதம் பாட வைப்பீர்களா? என்னை நானாக இருக்க வைத்தால்தான், எனக்குள் தேசப்பற்று வளரும். இதையெல்லாம், இந்தத் தலைமுறையின் பிள்ளைகள் மிக நுட்பமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு நான் பேசவில்லை.

ஒவ்வொருவரும் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசத் தொடங்கியிருக்கின்றனர். சென்னை கடற்கரையில், மதுரையில், தஞ்சையில் பல்லாயிரக்கணக்கில் ஜல்லிக்கட்டுக்காக கூடுகின்றவர்களை, கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. எங்கள் உரிமைகளை நசுக்கும் மத்திய அரசுக்கு தமிழக அரசும் துணை போகிறது. உங்கள் நடவடிக்கைகளை நிறுத்துங்கள். இல்லையென்றால், தமிழர் உணர்வுக்கு எதிரான முதலமைச்சராகத்தான் பன்னீர்செல்வத்தை மக்கள் பார்ப்பார்கள்” எனக் கொதிப்புடன் பேசி முடித்தார் சீமான்.