ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கோரி டெல்லி விரையும் அதிமுக எம்.பிக்கள்மோடியுடன் இன்று சந்திப்பு!

தமிழகத்தில் பொங்கல் திருநாளின் போது ஜல்லிக்கட்டு

நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் அதிமுக எம்பிக்கள் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.

காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட பட்டியலில் காட்டில் வாழும் விலங்குகளுடன் தமிழர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு மாடுகளும் சேர்க்கப்பட்ட கொடுமை முந்தைய காங்கிரஸ் அரசில் நடந்தது. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகாலமாக தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி ஜல்லிகட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்து போராடிக் கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதங்களை அனுப்பி வருகிறார். ஆனால் மத்திய அரசோ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரட்டும் என போக்கு காட்டிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை அதிமுக எம்பிக்கள் இன்று சந்திக்க உள்ளனர். இச்சந்திப்பின் போது, ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது.