சமூகவலை தளங்களில் வைரலாக பரவுகிறது பட்டினியுடன் நாட்டை காக்கிறோம் வீடியோவில் ராணுவ வீரர்!

ராணுவத்தில் நடக்கும் ஊழல் காரணமாக பனிபடர்ந்த காஷ்மீரில்

பணிபுரியும் நாங்கள் போதுமான உணவு கிடைக்காமல், எல்லையை காக்கும் பணியில் ஈடுபடுகிறோம் என ராணுவ வீரர் ஒருவர் வாட்ஸ்ஆப் வீடியோவில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நமது நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக எல்லையில் உறைய வைக்கும் பனியையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக எல்லையை காக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு அரசு அளிக்கும் உணவுப்பொருட்களை கூட ஒழுங்காக தராமல் உயர் அதிகாரிகள், அதை வெளியே விற்று காசு சம்பாதித்து வருவது ராணுவ வீரர் ஒருவர் வெளியிட்ட வாட்ஸ்அப் தகவல் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்த ராணுவ வீரரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தேஜ்பகதூர் யாதவ் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் அந்த வீரர் காஷ்மீரில் உள்ள 29வது பட்டாலியன் பிரிவில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். வீடியோவில் அவர் கூறுவதாவது: பனிசூழ்ந்த மலைப்பகுதியில் பணியாற்றி வரும் நாங்கள் பல நேரங்களில் போதுமான உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கிறோம். இன்று காலை உணவாக ஒரே ஒரு புரோட்டா மட்டுமே எனக்கு கிடைத்தது. மதிய உணவாக வேகவைக்கப்பட்ட பருப்புதான் கிடைக்கிறது. இரவு உணவும் சுவையற்றதாகவே உள்ளது. பெரும்பாலான நேரங்களில் நாங்கள் பசியுடன்தான் படுக்கைக்கு செல்கிறோம். இதற்காக நாங்கள் மத்திய அரசை குறை கூறவில்லை. மத்திய அரசு எங்களுக்கு தேவையான உணவை வழங்கத்தான் செய்கிறது.

ஆனால் அதிகாரிகள் அவற்றை சந்தைகளில் திருட்டுத்தனமாக விற்று விடுகிறார்கள். இந்த குறைந்த அளவு சத்துள்ள உணவை சாப்பிட்டு 10 மணிநேரத்திற்கும் அதிகமாக எப்படி எங்களால் பணியாற்ற முடியும் என்று தெரியவில்லை. இந்த வீடியோ ெவளியாவதால் எனக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும். ஆனாலும் சம்மந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு இந்த தகவல் எட்டவேண்டும் என்பதற்காகவே இதை வெளியிடுகிறேன்.
இவ்வாறு அவர் வீடியோவில் கூறியுள்ளார். இதுபற்றி அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லைப்பாதுகாப்பு படை வீரரின் புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ராணுவ அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.