ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தலைவர் பதவிக்கு அசாருதீன் போட்டி!

இந்திய அணி முன்னாள் கேப்டன் அசாருதீன்,

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் (எச்.சி.ஏ) தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
லோதா கமிட்டி பரிந்துரைகள் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் நிர்வாகிகள் பலர் பதவி விலக நேரிட்டுள்ளது. எச்.சி.ஏ தலைவராக இருந்து வந்த அர்ஷத் அயூப் ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, தலைவர் பதவிக்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் விண்ணப்பித்துள்ளார்.

தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து பேசிய அசார் கூறுகையில், ‘ஐதராபாத்தில் கிரிக்கெட் விளையாட்டுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ரஞ்சி கோப்பை போட்டியில் கடைசி அணிக்கு முந்தைய இடத்தை மட்டுமே பிடிக்க முடிகிறது. இந்த நிலையை மாற்ற விரும்புகிறேன். எச்.சி.ஏ.வை தனிநபர்களின் கைப்பாவையாக செயல்பட இனியும் அனுமதிக்க முடியாது. மாவட்ட அளவில் கிரிக்கெட்டின் தரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவேன்’ என்றார்.

1992, 1996, 1999 என மூன்று உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர் என்ற பெருமைக்குரிய அசார், 2000ல் வெடித்த மேட்ச் பிக்சிங் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி ஆயுள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் நீதிமன்றத்தால் தடையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 சதம் உள்பட 6215 ரன் குவித்துள்ளார்.