சர்ச்சையில் சிக்கிய திரிணாமூல் காங். எம்.பி!

ரூபாய் நோட்டு விவகாரம், சிட்பண்ட் மோசடி

நடவடிக்கை ஆகியவற்றால் மத்திய அரசு மீது மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்யும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான கல்யாண் பானர்ஜி மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து இருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் உள்ள ரிசர்வ் வங்கி பிராந்திய தலைமையகம் முன்பு அக்கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு கல்யாண் பானர்ஜி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய கல்யாண் பானர்ஜி கூறும் போது, “ மோடி ஆதரவாளர்கள் அவரை சிங்கம் என்று அழைக்கின்றனர். ஆனால், அவர் எலியின் மகன், குஜரத்தில் உள்ள அவரது வலைக்குள் பிரதமர் செல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை” என்று விமர்சனம் செய்தார்.

பிரதமர் மோடி குறித்து மிகவும் தனிப்பட்ட முறையில் அருவருக்கத்தக்க வகையில் விமர்சனத்தை முன்வைத்தது அரசியல் வட்டாரத்தில் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது. கல்யாண் பானர்ஜியின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.