டோனிக்கு புகழாரம் சூட்டிய யுவராஜ்சிங்!

டோனியை யுவராஜ்சிங்கின் தந்தை ஒரு பக்கம் வசைப்பாட,

யுவராஜ்சிங்கே அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

கேப்டன் பதவிக்கு முழுக்கு
இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பதவிகளில் இருந்து டோனி சமீபத்தில் விலகினார். அவரது கேப்டன்ஷிப்புக்கு பல்வேறு தரப்பிரும் புகழ்மாலை சூட்டி வருகிறார்கள். பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், ‘டோனியின் முடிவை மதிக்கிறேன். பணிவுடனும், பெருந்தன்மையுடனும் கேப்டன் பதவியை விட்டுச் சென்றுள்ளார்’ என்றார். மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜாகீர் அப்பாஸ், ‘மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு டோனி அளித்த பங்களிப்பு அளப்பரியது. அவரது தலைமையின் கீழ் இந்திய அணி புதிய உச்சத்தை தொட்டது. அவரது சாதனையை மிஞ்சுவது எளிதான காரியம் அல்ல’ என்று கூறியுள்ளார்.

யோக்ராஜ் சாடல்
ஒரு பக்கம் டோனிக்கு பாராட்டுகள் குவிந்தாலும், வழக்கம் போல் ஒரே ஒருவர் மட்டும் அவரை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, முன்னாள் வீரரும், யுவராஜ்சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் தான். ‘டோனியால் தான் எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கை பாழ்படுகிறது. வேண்டுமென்றே யுவராஜ்சிங்கை ஓரம் கட்டுகிறார். டோனி ஒரு அகங்காரம் பிடித்தவர். மீடியாக்களால் அவர் கிரிக்கெட்டின் கடவுள் போன்று வர்ணிக்கப்படுறார். அதற்கு அவர் தகுதியானவர் அல்ல. நான் மட்டும் பத்திரிகையாளராக இருந்திருந்தால் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்திருப்பேன். நிச்சயம் ஒரு நாள் அவருக்கு வீழ்ச்சி வரும்’ என்றெல்லாம் சகட்டு மேனிக்கு ஏற்கனவே திட்டி தீர்த்து இருந்தார்.

இப்போது யுவராஜ்சிங் 9 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்திருக்கும் நிலையிலும், டோனியை வசைப்பாடுவதை யோக்ராஜ்சிங் நிறுத்தவில்லை. மராட்டிய பத்திரிகை ஒன்றுக்கு யோக்ராஜ் அளித்த பேட்டியில், ‘யுவராஜ்சிங் மீண்டும் இந்திய அணிக்குள் அடிவைத்திருக்கிறார் என்றால், கேப்டனாக டோனி இல்லை என்பதை கவனிக்க வேண்டும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே, டோனி கேப்டனாக இல்லாமல் இருந்தால் தான் எனது மகனால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்று கூறியிருந்தேன். எனது கூற்று இப்போது நிரூபணமாகி விட்டது’ என்றார்.

யுவராஜ்சிங்–டோனியின் வீடியோ
இதற்கிடையே முதலாவது பயிற்சி ஆட்டம் முடிந்ததும் டோனியும், யுவராஜ்சிங்கும் தங்களது நட்புறவை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோ காட்சியை இணைந்து பதிவிட்டுள்ளனர். அதில் அவர்கள் தங்களுக்குள் கேள்வி கேட்டு சுவாரஸ்யமாக பதில் அளித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:–

யுவராஜ்சிங்:– இந்திய அணியில் கேப்டனாக உங்களது பயணம் பற்றி…?

டோனி:– அது ஒரு அற்புதமான பயணம். அதுவும் உங்களை போன்ற வீரர்கள் என்னுடன் இருந்ததால் எனது பணி மிகவும் எளிதாக இருந்தது. இந்த 10 ஆண்டுகளும் (கேப்டன் பதவியில்) உற்சாகமாக செயல்பட்டேன். அதே உற்சாகம் தொடரும் என்று நம்புகிறேன்.

யுவராஜ்சிங்: உலகின் தலைச்சிறந்த கேப்டன்களில் நீங்களும் (டோனி) ஒருவர். அதை உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களது தலைமையின் கீழ் விளையாடியது வியப்புக்குரிய அனுபவமாகும். உங்களது கேப்டன்ஷிப்பில் மூன்று பெரிய போட்டிகளில் இந்திய அணி (20 ஓவர் உலக கோப்பை, ஒரு நாள் போட்டி உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை) வாகை சூடியது. டெஸ்டில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பிடித்திருக்கிறோம்.

டோனி: நன்றி யுவி. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் நீங்கள் 6 சிக்சர் அடித்ததை எதிர்முனையில் நின்று நேரில் பார்த்ததை மறக்க முடியாது.

சிக்சர் அடிப்பீர்களா?
யுவராஜ்சிங்: அதற்குரிய வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. இனி நீங்கள் கேப்டனாக இல்லை. அதனால் அதிகமான சிக்சர்களை அடிப்பீர்களா?’

டோனி: பொறுத்திருந்து பார்க்கலாம். பந்து எனக்கு ஏற்ற வகையில் வரும் போது, சூழலும் அதற்கு சாதகமாக அமைந்தால் சிக்சர்களை நொறுக்குவேன்.

இவ்வாறு அந்த உரையாடலில் ஜாலியாக பேசியுள்ளனர்.