ஊடக போராளி மாமனிதர் த.சிவராம் 12ம் ஆண்டு நினைவுதினம்!

மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராமின் பன்னிரன்டாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தர்மரட்ணம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி கடத்தி செல்லப்பட்டு மறுநாள் ஏப்ரல் 29ஆம் திகதி கைக்கூலிகளால் கொலை செய்யப்பட்டார்.

ஊடகத்துறை வரலாற்றில் மிகவும் சவால் நிறைந்த காலகட்டத்தில் துப்பாக்கி முனைகளின் அச்சுருத்தல்களுக்கு மத்தியில் தனது கருத்துக்களின் ஊடாக உண்மைகளை உரக்கச் சொன்ன மிகவும் துணிச்சல் மிக்க ஊடகப்போராளியாக திகழ்ந்த ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் ஆவர்.

‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதி வந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும் பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார்.

இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்.” என சிவராம் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணினி யுகத்திற்குள் கொண்டு வந்த பெருமையும் சிவராமையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்தி எழுத்தாளராக, அரசியல் ஆய்வாளராக, படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்ட சிவராம் ஆரம்பத்தில் 1980களில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில்(புளொட்) முழுநேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம் 1990களின் நடுப்பகுதியில் அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றியவர்.

சிவராமின் வாழ்க்கை குறிப்பு

சிவராம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் மகேஸ்வரி, புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் அகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

சிவராமின் தந்தையார் கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அவரின் பாட்டனார் சபாபதிப்பிள்ளை தர்மரத்தினம் (வன்னியனார்) 1938ஆம் ஆண்டில் மட்டக்களப்பின் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட இலங்கை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சிவராம் 1989ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர்.

ஆரம்பக்கல்வியை புனித மிக்கேல் தேசியப் பாடசாலையில் கற்றதுடன், அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் கல்வியை தொடர்ந்தார்.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் பேராதனைப் பல்கலைகழகத்தில் அனுமதி பெற்றார்.

செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற அவர் ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மாத்திரம் அங்கு பயின்ற பின்னர் அரசியல் ஈடுபாட்டினாலும் 1983இல் இடம்பெற்ற இனக்கலவரங்களினாலும் பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டார்.