”அடியே பெண்டாட்டி” பாடல் விமர்சனம்!

அற்ப காரணங்களுக்காக ”ஆகோ ஓகோ” என்று எழுத எம் எழுதுகோலுக்கு தெரியாமல் போனது எம் தவறல்ல. உண்மையை உள்ளபடி எடுத்துரைக்க எம் மனதில் துணிவும் நேர்மையும் அவசியம்.

ஆக எமது விமர்சனங்கள் என்பது ஒரு கலையை அல்லது பாடலை தரமிறக்க எழுதப்படுபவை என்று எந்த கலைஞராவது நினைத்துக்கொண்டால் அதற்காக நாம் பொறுப்பாக முடியாது. உங்களில் கொண்ட உண்மையான அக்கறையில் எழுதப்படும் விமர்சனங்களை புறம்தள்ளி செல்வது ஆக்கபூர்வ ஆக்கங்களை செல்லரிக்க செய்வதற்கு ஒப்பானது.
சரி இப்போது பாடல் விமர்சனத்திற்கு வருவோம்.
அடியே பெண்டாட்டி,
காதல் கணவனின் அற்புத வார்த்தையில் காதலும் காமமும் பின்னி பிணையும் வார்த்தை ஒன்றினை தலைப்பாக வைத்த படக்குழுவினர்
அந்த தலைப்புக்கு ஏற்ற காட்சிகளை மிக இறுக்கமாக நெருக்கமாக கொண்டு சென்று இருக்கின்றார்களா என்றால் எமது பதில் என்னவோ இல்லை என்று தான் சொல்ல முடிகின்றது. பாடல் ஆரம்பிக்கும் போது வழங்கப்பட்ட இசை ஏதோ ஒரு பக்திப்பாடலை நினைவுபடுத்தி செல்கின்றது. பிமல் மீடியா என்ற உருண்டைக்கு மேலே வந்து சென்ற நீர்த்துளி அழகின் அம்சம். அதற்கு நாம் நிச்சயம் பாராட்டு சொல்லியே தீர வேண்டும். அடுத்து நாயகி மழையில் நனைந்துகொண்டு உடைகளை எடுப்பதும், நாயகன் ஒரு இடத்தில் இருந்து வந்து அணைப்பதும், போலியான ஒரு நடிப்பாக தோன்றுவதை எம்மால் தடுக்க முடியவில்லை. மழையை கொண்டு வந்தால் ஈழ சினிமாவில் புதுமையை புகுத்தினோம் என்று கூற முற்பட்ட இயக்குனர் அந்த புதுமையை கொடுமையாக்கி சென்றதை எம்மால் ஏற்க முடியவில்லை. ஒரு பக்கம் மட்டுமே மழை அடிப்பதையும் அருகில் இருந்த பச்சை நிற தொட்டி ஒரு துளி மழைதுளியும் படாமல் இருந்ததையும் கவனித்து இருந்தால் அந்த காட்சி நிறைவாக இருந்து இருக்கும். போலியாக செய்யும் காட்சிகளை தவிர்த்து யதார்த்த காட்சியமைப்புகள் மிகவும் அவசியம் என்பதை இயக்குனர்கள் உணர்வது அவசியம்.
ஒரு காதல் மனைவியும் கணவனும் வாழும் வாழ்க்கையும் அவர்களது இளமை காதலையும் இடையிடையே கொண்டுவந்த காரணம் திரைக்கதை அமைத்த திரைக்கதையாளருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். நாயகனின் நண்பர்கள் வந்து பேசிக்கொண்டு இருக்கும் போது, நாயகி கணவனிடம் முத்தம் கேட்பதும் அதன் பின்னர் நாயகன் நாயகியின் நடிப்பும்,மீண்டும் வருவது நடிப்புக்கு பஞ்சமாகி போவதாகவே உணர முடிகின்றது.
நாயகன் கட்டிலில் இருந்து எழுந்து வந்து நாயகி கையை பிடிக்க நாயகியின் நடிப்பு இயல்பாக பொருந்தி போனது அழகு.அதே பொம்மை, அதே கட்டில், நாயகன் சமையல் , நாயகி நாயகன் சண்டை என அரைத்த மாவையே அரைத்த பெருமை ”அடியே பெண்டாட்டி”யை சேரும்.
”பாய்ஸ்” படத்தில் வந்த ”துள்ளல்” மட்டும் ஈழத்து சினிமாவின் ஒரு சின்ன மாற்றம் என்று கூறலாம். குடும்ப நாயகி, ஒற்றை சேலை, நவீன ஆடை என வலம் வருவது தான் அழகு என்று, இன்றைய கலாச்சாரத்தை சொல்ல வந்தாலும் ஏனோ இது ஈழ சினிமாவில் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்று கூறிட முடியவில்லை.
ஆளுமையான வரிகளுக்கு சொந்தமான சதீஸ்காந்த், எங்கோ தனது ஆளுமையை தொலைத்ததும் இங்கே நிகழத்தான் செய்தது.
தேவையற்ற ராப் வரிகள் பாடலுக்கு இடையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று உட்செலுத்தியது அவசியமற்ற ஒன்றே என்பதை படக்குழு கவனித்து இருக்க வேண்டும்.
”ஷமீல்” வளர்ந்துவரும் போட்டியாளர்களின் சவாலை சமாளிக்க தன்னை மாற்றிகொள்ள்ள வேண்டும் என்பது காலத்தின் தேவை.
இப் படத்தின் எடிட்டர் ”சசிகரன் யோ” தனது வேலையை சிறப்பாக செய்தாலும் இடையிடை வரும் மொழிச்சிதறல்களை கவனிக்க தவறியமை அவரது கவலையீனத்தையே எடுத்துக் காட்டுகின்றது.
ஒளித்தொகுப்பு மிகவும் சிறப்பாக இந்த பாடலுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு பிரியந்தனுக்கு ஒரு சபாஷ் போட்டே ஆக வேண்டும்.
மொத்தத்தில் ”அடியே பெண்டாட்டி” ஈழ சினிமாவுக்கு தேவையில்லாத பெண்டாட்டி.

என்றும் அன்புடன்
காவியா