தற்காலிக அரங்கொன்று தகர்ந்தையையால் மூன்று பார்வையாளர்கள் காயம்!

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி நடைபெற்ற எமிரேட்ஸ் றிவர்சைட் மைதானத்தின் தற்காலிக அரங்கொன்று, பகுதியளவில் தகர்ந்தையையடுத்து, மூன்று பார்வையாளர்கள் காயமடைந்ததுடன், 200 பேர் மைதானத்தின் இன்னொரு பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது, மைதான நேரப்படி, இரவு 9.30 மணியளவில், மைதானத்தின் வட கிழக்கு மூலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றிருந்தது. தளத்தின் பகுதியொன்று உட்சென்றதாகக் கூறப்படுகின்ற நிலையில், அந்தத் துவாரத்துக்குள்ளால் விழுந்தமை காரணமாக, பார்வையாளரொருவர் காயமடைந்தாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மைதானத்தைக் கொண்ட டேர்ஹாம் கிரிக்கெட் கழகத்தின் அறிக்கையொன்றின்படி, மைதானத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள தளமொன்று நிலையற்றதாகி பார்வையாளர் வீழ்ந்ததில் மூன்று பேர் காயமடைந்தனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.