வெளிப்படையாக மைத்திரி,ரணில் அரசை காப்பாற்றவே சம்பந்தன் போராட்டம்!

புதிய அரசியலமைப்பு வாக்கெடுப்பிற்கு விடப்படும் வரை தேர்தல்கள் வேண்டாம் என்பதற்காகவே 20ஆம் திருத்தத்திற்கு தாம் ஆதரவளிக்கிறோம் என்ற உண்மையை இரா.சம்பந்தன் வெளிப்படையாக சொல்லியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கு.குருபரன்
20ஆவது அரசியலமைப்பு திருத்ததத்தை கொண்டு வர அரசாங்கம் முயற்சித்ததற்கான அல்லது முயற்சிப்பதற்கான காரணம் வர இருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை மைத்திரியும், ரணிலும் எதிர்கொள்ளத் தயாரில்லை என்பதாலேயேயாகும்.ஏனெனில் மகிந்த வென்றுவிடுவார் என அவர்கள் அஞ்சுகின்றனர். மகிந்த வென்றால் முற்றுமுழுதாக அரசியலமைப்பு முயற்சி கிடப்பில் போடப்படும் எனக் கூட்டமைப்பு அஞ்சுகின்றது.

அதற்காகவே மாகாண சபைத் தேர்தல்களை பிற்போட முயற்சிக்கிறார்கள். திருத்தப்பட்ட 20க்கு ஆதரவு அளிப்போம் என்று கூட்டமைப்பு சொல்வதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கின்றது. ஆனால் 20ஐ ஆதரிப்பதற்கான உண்மையான காரணம் ரணில் – மைத்திரி அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே.
நல்லது. இனி மேல் தெற்கில் சனநாயக விரோத செயல்களுக்கு எதிராக தமிழர்கள் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்ற அறப் பாடத்தை எங்களுக்கு எடுப்பதற்கு நீங்கள் தகுதி இழந்து விட்டீர்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

சனநாயகத்தை கடைபிடிக்காததால், மனித உரிமைகளை கடை பிடிக்காததால் தான் ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தது என்ற அறப் பாடத்தை எங்களுக்கு எடுப்பதற்கு நீங்கள் தகுதி இழந்து விட்டீர்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம். கடைசியில் புதிய அரசியலமைப்பு வராது. ராஜபக்ச பாணியில் சனநாயகத்தை தாம் ஆட்சியில் இருப்பதற்காக நலிவுபடுத்தும் ரணில்- சிறிசேனவின் முயற்சிக்கு ஆதரவளித்தார்கள் என்பது தான் மிஞ்சும். இலங்கையில் சனநாயகத்தை சீர்படுத்த முயற்சிக்கும் கூட்டமைப்பின் அறப் பற்றும் நிலைப்பாடும் தோற்றுப் போயிருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.