பிரான்ஸ் யுவதியிடம் சேட்டை இளைஞனுக்கு விளக்கமறியல்!

பிரான்ஸைச் சேர்ந்த 21 வயது யுவதி தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்து, பாலியல் சேட்டை புரிந்ததாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, அக்குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்ட 23 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

திருகோணமலை, டைக் வீதியிலுள்ள உல்லாச விடுதியொன்றில் தங்கியிருந்த மேற்படி யுவதி தங்கியிருந்த விடுதிக்கு அருகிலுள்ள விடுதியிலேயே, பல்கலைக்கழக மாணவனான குறித்த இளைஞனும் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு, யுவதி தங்கியிருந்த அறைக்குள் புகுந்த இளைஞனர், யுவதிக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்யதாக, துறைமுக பொலிஸ் நிலையத்தில், புதன்கிழமை (20) அதிகாலை 2 மணியளவில், யுவதியால் முறைப்பாடு செய்யப்பட்டது.

அம்முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட துறைமுக பொலிஸார், மாத்தளை- அலுவிஹார பகுதியைச் சேர்ந்த இனைஞனைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.