கனவு விதைத்தல்…!

நிலாவை அழைத்தொரு
பாடல் பாடி
வராத நிலாவை
வர அழைத்து
தொட முடியா நிலாவை
தொடப் பாவனை காட்டி
சோறூட்டிய அன்றைய அம்மாவின் அன்பிலே
எட்ட முடியாத தூரத்தை
தொட்டிடனும் பிள்ளை என்ற
கனவு விதை விதைத்தல்
அறியாமல் நிகழ்ந்ததே..

இன்றைய அம்மாக்கள்
நவீன தொடர்பாடல் கண்டுமே
சீரியலையும் சின்னத்திரையும்
காட்டி காட்டி சோறூட்டி
சீராட்டி மகிழ்கிறார்..

அந்தோ பரிதாபம்!!??
ஆங்கந்த சீரியலில்
மாமியார் கொடுங்கோலி..
மருமகளோ ஒரு வில்லி…
மாற்றான் மனைவியை
மறைவாய் காதலித்தல்…
விவாகரத்து வீண்கோபம்
வில்லங்க மாமனார்
வால் வெட்டு ஆள் வெட்டு
பகை குரோதம் பாலியல்
இவையெல்லாம் போகுமதில்..

இதைத்தானே காட்டி காட்டி
சோறூட்டி மகிழ்கிறார்.
ஐயகோ ! இதிலிருந்து
எட்ட முடியா தூரத்தை
கற்றிடத்தான் முடியுமா?
கனவு தான் பெருகுமா?

நல்ல விதை விதைத்தால்
நல்ல அறுவடை வீடு வரும்
சப்பி நெல்லை விதைத்திட்டு
விளைவில்லை என வருந்தல்
முறையல்ல..முறையல்ல.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா