தமிழீழ மலர்களே… மலர்ந்தாடும் நாள் தூரமில்லை…!

இதய பந்தலின் ஒளிர்மணியாய்
நெஞ்சில் பூத்திடும் தீபங்களே!
எங்கள் மாவீரச் செல்வங்களே!
தங்கத் தமிழீழப் பசுமைகளே!

கார்த்திகை மாதக்
கார்மேகம் நனைந்தழ
விடுதலைக்காக
வித்தாகிப் போன உம் கல்லறை வாசலில்
தீபங்கள் ஏற்றினோம்.

திசையெங்கும் ஒளிர்ந்த
தீபச் சுடர்களில்
உங்கள் முகம் பார்த்து அகம் உருகி
தெய்வங்களே உம்மை
தொழுதிட்டோம் அன்று.

புதுவையின் பாடல்
சொரிகின்ற முகாரி
துயிலுமில்லத்தை நிரப்ப
பூமித்தாயும் நெஞ்சுபிளக்க
நெட்டுயிர்த்து கதறுவாள்.

தேம்பலில் மார்க்கூடு
சத்தியம் செய்கையில்
தேகங்கள் சிலிர்த்துமே
வேள்வி மூண்ட மனதுடன்
புது நடை பிறக்குமே..

அடங்காப் பற்றுடன்
அன்னை மண் நேசித்து
ஆகுதியான மாவீரரே! உமையிங்கு விலைகூறி
அரசியல்புரிகின்ற கொடுங்கோலர்
செயல் கண்டும்
விழிமூடிக் கிடத்தல் நியாயமா?

வரியுடையோடு தலைவனுடன்
தளபதிகள் முதல் உமக்காய் சுடரெற்ற
வழிகின்ற விழிநீரை
மழைநீர் கரைத்துநிற்க
ஒளீதீபம் ஏற்றி
வழிபட்ட துயிலிடத்தில்
நரிகள் ஏறி தீபம் ஏற்ற
நாம் செய்த பாவமென்ன?

இனியொரு விதி எழுதப்பட மாட்டாதா?
உயிர்விதைகளை விததைத்து
செந்நீரைப் பாய்ச்சி
தேகங்கள் பசளையான
மாவீரச் செம்மல்களே தாயாய்
தலைகோதி
மனதால் நாம் பாடும்
முகாரி கீதத்தில்
நனைந்திடுங்கள்.

விதி மாறும்
விதைப்புக்கு பலன் கிடைக்கும்
தமிழீழம் மலரும்
உங்கள் விழிகளும்
மகிழ்ந்தாடும்.
அந்த நாள் தூரமில்லை.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா.