எங்கள் குடும்பத்தில் நடந்த வருமான வரி சோதனை தோல்வி!
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. (அம்மா அணி) பொதுச்செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமளரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்திலும் திவாகரன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக மயிலாடுதுறையில் திவாகரன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்கூட்டம் நடத்தியதை அமைச்சர்கள் வரவேற்று இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அமைச்சர்களை அழைக்காமல் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டுள்ளார். இது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜனை போட்டியிட செய்து அவரை தமிழக முதல்-அமைச்சராக்கும் ஒத்திகை நிகழ்ச்சி போல் உள்ளது.

இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் விட்டு கொடுப்பார்கள் போல் தெரிகிறது. இவர்கள் இருவருக்கும், தமிழகத்தின் உரிமைகளை கேட்டு பெறுவதற்கு திராணி இல்லை.

இந்தியாவிலேயே மிகப்பெரிய வருமான வரி சோதனை எங்கள் குடும்பத்தில் தான் நடந்து இருக்கிறது. ஆனால் இந்த சோதனை தோல்வியில்தான் முடிந்து உள்ளது. இந்த சோதனையின்போது ரூ.5 கோடி பறிமுதல் செய்ததாக கூறி வருகிறார்கள்.ஆனால் சேகர்ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு ரூ.250 கோடி பறிமுதல் செய்தனர். அதன்மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதேபோல் அகில இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் வீட்டில் கூட ரூ.1,500 கோடியும், 1½ கிலோ தங்கமும் கைப்பற்றினார்கள். அது என்னவானது என்றே தெரியவில்லை.

ஆனால் 35 கார்களில் வந்து மன்னார்குடியில் சோதனை முடித்து சென்ற வருமான வரித் துறையினர் 4 நோட்டுகளை மட்டும்தான் எடுத்துச் சென்றனர். வருமான வரி சோதனைகள் குறித்து இதுவரை அதிகாரிகள் எதுவும் பதில் கூறாத போது, சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

அ.தி.மு.க. எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை மட்டுமே பணிய வைத்து உள்ளனர்.

எந்த சோதனையாலும் எங்களை பணிய வைக்க முடியாது. இந்த அரசாங்கம் அடுத்த தேர்தல் வரைதான் செயல்படும். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜனதா கட்சிக்கு தாவி விடுவார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*