பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் திருப்பாதிரி புலியூர் பாடலீஸ்வரர்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரி புலியூரில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு அம்பாள் பெரிய நாயகியுடன் சிவன் பாடலீஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இங்கு அம்பாள் பெரிய நாயகியை கணவரை பிரிந்த பெண்களும், மனைவியை பிரிந்த ஆண்களும் இந்த அம்பாளை வழிப்பட்டால் சேர்ந்து வாழ்வார்கள் என்பது இத்தலத்தின் ஐதீகம்…

பக்தர்களின் நேர்த்திகடன் நிறைவேறியதும் அம்பாளுக்கு பட்டு வஸ்திரம் சார்த்தி பிராத்தனையை நிறைவேற்றுகின்றனர்.

பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது நடக்கும் இப்படி ஒரு சமயம் பார்வதி தேவிக்கே இடது கண் துடித்து பிரிந்த கணவர் சிவனுடன் இணையும் பாக்கியம் கிடைத்தது. இந்த சம்பவம் நடந்த தலம் கடலூர்; திருப்பாதிரி புலியூர் பாடலீஸ்வரர் கோவில்.

பார்வதி தேவியுடன் சொக்கட்டான் ஆடினார்

பூலோகத்தில் வந்து தங்கி உயிர்களை ஆட்கொள்ள சிவன் விரும்பினார். இதற்காக ஒரு லீலையை நிகழ்த்தினார். ஒரு சமயம் பார்வதி தேவியுடன் சொக்கட்டான் ஆடினார் பலமுறை ஆடியும் பெருமான் தோற்றார். ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறி அடம் பிடித்தார். அவருடன் ஊடல் கொண்ட பார்வதி, அவரது கண்களை சிறிது நேரம் மூடினாள். சிவனின் கண்களாக சூரிய சந்திரர் உள்ளனர். அவை இருண்டதால். உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. தன் விளையாட்டான செயலால், உலக உயிர்கள் சற்று நேரம் பட்ட இன்னல் கண்டு மனம் வருந்தி, தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு சிவன், ‘நீ பூலோகம் சென்று அங்குள்ள சிவத்தலங்களை பூஜித்து வா. எந்த தலத்தில் உன் இடது கண்ணும், இடது தோளும் துடிக்கிறதோ அந்தத் தலத்திற்கு வந்து, உன்னோடு; நான் இணைவேன்,“ என்றார். தேவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இங்கு வந்து இடது கண்ணும் இடது தோளும் துடித்தால் அங்கே தங்கி சிவனை பூஜித்தாள். சிவனும் அங்கு வந்து அம்பாளுடன் இணைந்தார்.

சிவகரைத்தீர்த நீரை தெளித்தக் கொண்டால் நினைத்து நிறைவேறும்

இந்தக் கோவிலுள்ள சிவகரைத்தீர்த நீரை தெளித்தக் கொண்டால் நினைத்து நிறைவேறும். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள். நாவுக்கரசரை மற்ற எந்தக் கோவிலிலும் உழவாரக் கருவியுடன் நின்ற நிலையிலேயே பார்க்க முடியும் இங்கு மட்டுமே சுவாமிகள் உட்கார்ந்த நிலையில் தனி சன்னதியில் காட்சி தருகிறார். இது கிடைப்பதற்கரிய காட்சியாகும். சப்தமார்தக்கள் சந்நிதி இங்கு கோயிலை ஒட்டியே இருக்கிறது.

பொதுவாக சிவாலயங்களில் பள்ளியறை அம்மன் சன்னிதியை ஒட்டியே இருக்கும். இந்தக் கோவலில் சுவாமி சன்னிதியை ஒட்டி உள்ளது. தினமும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத் தனிச்சிறப்பு. இங்கே சிவனுக்கே மதிப்பு அதிகம். அவர் ஆயிரங்கலைகளோடு கூடிய சந்திரனை தலையில் சூடிதங்கியுள்ள இடம். எனவே அவரை எண்ணி எண்ணி தவமிருக்க அம்பாள் தேர்ந்தெடுத்த தலம் இதுவே ஆகும். எனவே அன்னையே பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள். மேலும் இங்குள்ள விநாயகரின் கரங்களில் ஆயுதம் ஏதும் கிடையாது. பாதிரி மலர்க் கொத்துக்கள் மட்டுமே உள்ளது. இத்தகைய சிலையை பார்ப்பதும் அரிது.

திருநாவுக்கரசர் கரையேறிய கதை

திருநாவுக்கரசரை, மகேந்திரவர்ம மன்னன் (கி.பி. 600-630) கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளிய போது அவர் ‘கற்றூணைப்பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும், போது அவர் நற்றுணையாவது நமசிவாயவே” எனப் பாடித்துதிக்க அந்தக் கல் தெப்பாமாக மாறி கடலில் மிதந்து வந்து கரையேறியது. மக்கள் பரவசமடைந்து அவரை வரவேற்கச் சென்றார்கள். நாவுக்கரசர் கடலில் இருந்து. கரையேறிய இடம். ‘கரையேற விட்ட குப்பம்” என்னும் பெயருடன் இன்றும் விளங்குகிறது. அவரை முதன்முதலில் அப்பர் என்று ஞானசம்பந்தார் அழைத்தது இத்தலத்தில் தான்.

சிவகரை தீர்த்த சிறப்பு

இந்தக் கோவிலிலுள்ள தீர்த்தத்தை சிவகரை தீர்த்தம் என்கின்றனர். சிவன் சித்தராக உருக்கொண்டு வந்து கை வைத்த இடம் இது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்துள்ளதாக ஐதீகம். ஈசான்ய மூலையில் இந்த தீர்த்தம் இருப்பதால் இந்த தீர்த்தத்துக்கு சக்தி அதிகம். இங்குள்ள அம்மனை பெரிய நாயகி என்கின்றனர். கணவரைப் பிரிந்த பெண்கள், மீண்டும் இணைய அம்பாளுக்கு பட்டு சாத்தி வழிபடுகின்றனர். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை பாடியுள்ளார். ஆகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர், உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம். புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம். இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது.